/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
/
பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 11, 2025 08:42 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி நாச்சியார் பள்ளியில் போலீஸ் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஏ.எஸ்.பி., சிருஸ்டிசிங் தலைமை வகித்து, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்.
குறிப்பாக, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள், பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகள், குடும்ப உறுப்பினர்களின் உளவியல் தாக்கங்கள் குறித்து விளக்கப்பட்டது.
தவிர, போதை பொருள் பயன்பாட்டை தடுக்க, தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்புக்கு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வால்பாறை வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், போலீசார் சார்பில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது. வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
படிக்கும் வயதில் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக கூடாது. போதை பொருட்கள் பயன்படுத்துவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். படிப்பில் மட்டுமே முழுகவனம் செலுத்த வேண்டும். நுாலகத்தை பயன்படுத்தி புத்தகங்கள், செய்தித்தாள்களை படிக்க வேண்டும், என, அறிவுறுத்தப்பட்டனர்.
உடுமலை பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டம் சார்பில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.
நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஜான்பாஷா, போதை ஒழிப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். ஆசிரியர் கார்த்திகா ஆனந்தி, உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள், மாணவர்களும் பின்தொடர்ந்து உறுதிமொழி எடுத்தனர்.
மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டி, முழக்க சொற்றொடர் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி தலைமையாசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.
* உடுமலை எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு
பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் பார்வதி வரவேற்றார். தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் வான்மதி போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கூற மாணவர்கள் ஏற்றனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சேஷநாராயணன் நன்றி தெரிவித்தார்.
* பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு போதைபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், அதன் விளைவுகள் குறித்து ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வள்ளிமயில் தலைமை வகித்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர்.