ADDED : ஜன 14, 2026 05:11 AM

கோவை: காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து நேற்று மாலை சோமனூர் நோக்கி(தடம் எண், 90) அரசு சொகுசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் மதுபோதையில் ஒருவர் ஏறினார். பஸ் லட்சுமி மில் சிக்னலை தாண்டி சென்ற போது அடுத்த நிறுத்தமான பீளமேடு, எஸ்.ஓ., பங்க் பகுதியில் பஸ்ஸை நிறுத்தும்படி, அந்நபர் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் சொகுசு பஸ் என்பதால், நிறுத்த முடியாது என, கண்டக்டர் தெரிவித்தார். அந்நபர் தகாத வார்த்தைகளால் கண்டக்டரை திட்டி ரகளையில் ஈடுபட்டார்.
ரகளை முற்றியதால், டிரைவர் பஸ்ஸை ரோட்டோரம் நிறுத்தினார். போதை ஆசாமி பஸ்ஸில் இருந்து கீழே இறக்க முயன்ற போது கண்டக்டரை தாக்கினார்.
பஸ்ஸில் நடந்த இச்சம்பவத்தை பயணி ஒருவர் மொபைல்போனில் வீடியோ எடுத்தார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் விசாரிக்கின்றனர்.
