/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதார் எண் 'மாஸ்கிங்': பதிவுத்துறை நடவடிக்கை
/
ஆதார் எண் 'மாஸ்கிங்': பதிவுத்துறை நடவடிக்கை
ADDED : பிப் 28, 2024 08:30 AM

சென்னை : பிரதி ஆவணங்களில், சொத்து உரிமையாளரின் ஆதார் எண்ணை, பாதுகாப்பு காரணங்களுக்காக, 'மாஸ்கிங்' முறையில் மறைக்கும் நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் பத்திரங்களின் பிரதி உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும். பின், அசல் ஆவணம் அளிக்கப்பட வேண்டும்.
ஒரு நபரின் சொத்து குறித்து, யார் வேண்டுமானாலும் பிரதி ஆவணம் பெற முடியும். அதற்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினால் போதும்.
பிரதி ஆவணம் வழங்கும் போது, அதில் பதிவின் போது அளிக்கப்பட்ட ஆதார் விபரங்களும் வெளியாருக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இது, தனிநபர் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற புகார் எழுந்தது.
மேலும், ஒரு சொத்தின் பிரதி ஆவணங்களை யார் யார் பெற்றனர் என்ற விபரங்களை, அதன் உரிமையாளர் அறிய முடியாத நிலையும் எழுந்துள்ளது. இது, சட்ட ரீதியாக பதிவுத் துறைக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது, ஆதார் எண் விபரங்கள் பெறப்படுகின்றன. இதேபோன்று, பிரதி ஆவணம் பெறுவதற்கும் ஆதார் எண் பெறுவதுடன், ஆன்லைன் முறையில் சார் - பதிவாளர் சரிபார்த்து உறுதிபடுத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
பிரதி ஆவணங்களை ஆன்லைன் முறையில் வழங்கும் போது, அதில் உரிமையாளரின் ஆதார், கைரேகை தொடர்பான, 'பயோமெட்ரிக்' விபரங்கள் வெளியாருக்கு செல்வதை தடுக்க வேண்டும்.
ஆதாருக்கான பாதுகாப்பு வழிமுறைகள் அடிப்படையில், சொத்து பத்திரங்களில், ஆதார் எண்களை, 'மாஸ்கிங்' முறையில் மறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திரப் பதிவுக்கான, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில், இதற்காக சில தொழில்நுட்ப மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

