/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்
/
வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்
வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்
வால்பாறை செல்ல இ-பாஸ் நடைமுறை.. இன்று முதல்! கவியருவி செல்லவும் பதிவு கட்டாயம்
ADDED : நவ 01, 2025 12:07 AM

பொள்ளாச்சி: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆழியாறு கவியருவிக்கு செல்வோரும் இந்த நடைமுறை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர். பண்டிகை நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணியர், இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து, இன்று முதல் இ-பாஸ் நடைமுறைக்கு வருகிறது.
கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆழியாறு சோதனைச்சாவடியிலும், கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் வரும் சோலையாறு அணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும், இ-பாஸ் பதிவு செய்யலாம், அங்கு இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
பொள்ளாச்சி அருகே ஆழியாறு சோதனைச்சாவடியில், இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படுவது, முன்னேற்பாடு பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்வின் போது, இ-பாஸ் நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். சுற்றுலா பயணியர் முறையாக பாஸ் பெற்றுள்ளனரா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும், ஆழியாறு சோதனைச்சாவடி அருகே, 'க்யூஆர்' கோடுடன் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில், வால்பாறை செல்ல, 'க்யூஆர்' கோட்டை ஸ்கேன் செய்து, இ-பாஸ் பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிமுறை குறித்து தெரியாத சுற்றுலா பயணியருக்கு வழிகாட்டுதல் செய்து, இ-பாஸ் எடுக்க வழிவகை செய்யலாம், என, அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆழியாறு கவியருவிக்கு சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். கவியருவிக்கு ஆழியாறு சோதனைச்சாவடியை கடந்து செல்ல வேண்டும். கவியருவி செல்வதாக கூறி வால்பாறைக்கு பயணிக்க வாய்ப்புள்ளது.இதை தவிர்க்க கவியருவிக்கு செல்லவும் இ-பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமியிடம் கேட்ட போது, ''ஆழியாறு சோதனைச்சாவடி கடந்து செல்ல வேண்டுமானால், இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். கவியருவிக்கு செல்வதாக கூறி வால்பாறை சென்றால் கண்காணிக்க முடியாது. இதை தவிர்க்க கவியருவிக்கு செல்லவும் இ-பாஸ் பெற வேண்டும்,'' என்றார்.

