/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்!'
/
'ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்!'
'ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்!'
'ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை குணப்படுத்தலாம்!'
ADDED : பிப் 04, 2024 12:26 AM

கோவை;உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மண்டல புற்றுநோய் மையம், கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பாக மருத்துவமனை வளாகத்தில் விழா நடத்தப்பட்டது.
இதை தொடர்ந்து கதிரியக்க பட்டப்படிப்பு மாணவர்களின் விழிப்புணர்வு நாடகமும், டாக்டர்கள், செவிலியர், செவிலிய பயிற்சி பள்ளி மாணவர்கள், மண்டல புற்றுநோய் மையத்தை சேர்ந்தவர்கள் அடங்கிய, 250க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற, பிரம்மாண்ட புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. டீன் நிர்மலா தலைமை தாங்கினார்.
இதுகுறித்து டீன் நிர்மலா கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாற்றங்களாலும், நம் வாழ்வியல் முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், முழுமையாக குணப்படுத்தி விடலாம். புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளான நீண்ட நாள் ஆறாத புண்கள், இருமல், சளியில் ரத்தம், மார்பகக் கட்டிகள், சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம், பெண்களுக்கு அசாதாரண ரத்தப் போக்கு, தவிர்க்க முடியாக எடை இழப்பு, சோர்வு போன்றவை இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
புற்றுநோய் கண்டறிய தேவையான பரிசோதனைகள், குணப்படுத்த தேவையான சிறப்பு அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் சிறப்பு மருந்துகள் அனைத்தும் அரசு மருத்துவமனையில் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
புற்றுநோய் மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் பிரபாகர், புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் பாலமுருகன், டாக்டர் செல்வராஜ் மற்றும் மண்டல புற்றுநோய் மையத்தை சார்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.