/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளான் வளர்த்தால் 18 நாட்களில் வருவாய்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
/
காளான் வளர்த்தால் 18 நாட்களில் வருவாய்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
காளான் வளர்த்தால் 18 நாட்களில் வருவாய்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
காளான் வளர்த்தால் 18 நாட்களில் வருவாய்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
ADDED : ஜன 26, 2024 12:32 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட, தோட்டக்கலை துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை, தக்காளி, வாழை மற்றும் பிற வகை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இதில், காளான் வளர்ப்பு குறைவாக உள்ளது. இதில், விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு, காளான் வளர்ப்பு முறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுக்காக, மொட்டு காளான், பால் காளான் மற்றும் சிப்பி காளான் பயன்படுத்தப்படுகிறது. இதில், சிப்பி காளான் அதிகளவு வளர்க்கப்படுகிறது. இதில், 2.9 சதவீதம் புரதம், 0.4 சதவீதம் கொழுப்பு, 5.3 சதவீதம் மாவு பொருள் மற்றும் 1.17 சதவீதம் நார் சத்துக்கள் உள்ளது.
காளான்கள், 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள பகுதிகளில், 85.90 சதவீதம் ஈரப்பதம் கொண்ட இடங்களில் வளரும்.
கூரை வேயப்பட்ட நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் உள்ள சிறிய அளவிலான குடில்கள் அமைத்து காளான் வளர்க்கலாம். ஒரு கிலோ காளான் உற்பத்தி செய்வதற்கு, 16 சதுர மீட்டர் இடம் இருக்க வேண்டும்.
குடிலின் உட்பகுதியில் குளிர்ந்த சூழ்நிலை உண்டாக்க ஆற்று மணலை பரப்ப வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில், ஈர சாக்குகளை சுவற்றின் உட்பகுதியில் தொங்க விட வேண்டும்.
காளான் உற்பத்தி செய்யும் போது, தினமும் ஒரு மணி நேரம் காலை மற்றும் மாலை என இரு வேளையிலும், குடிலை திறந்து வைக்க வேண்டும். ஒரு வாரத்தில், படுக்கை வெண்ணிறமாக மாற வேண்டும். 12 முதல் 15 நாட்களில் மொட்டுக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
முதல் அறுவடையானது, 18 முதல் 22 நாட்களில் கிடைக்கும். ஒரு காளான் படுக்கையில் இருந்து நான்கு முறை அறுவடை செய்யலாம். இதில், அதிகபட்சமாக அரை கிலோ காளான் கிடைக்கும். அறுவடை முடிந்த பின், காளான் படுக்கைகளை உறக்குளியில் போட்டு மக்க வைத்து உரமாக பயன்படுத்தலாம்.
காளான் எடையில், 90 சதவீதம் நீர் உள்ளது. எனவே, பாலித்தீன் பைகளில் அடைக்காமல் அட்டைபெட்டி, ஓலைக்கூடை, மூங்கில் கூடை போன்றவைகளை உபயோகிக்க வேண்டும். பெட்டிகளில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். அதன்பின், தேவைக்கு ஏற்ப சிறிய பைகளில் அடைத்து விற்பனை செய்யலாம்.
காளான் வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், கிணத்துக்கடவு தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனா தேவி தெரிவித்தார்.

