ADDED : ஏப் 22, 2026 07:57 PM
உடுமலை: சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், உடுமலை பகுதியில், கத்தரி விலை தொடர்ந்து உயர்ந்து, வருகிறது.
உடுமலை சின்னவீரம்பட்டி, சுண்டக்காம்பாளையம், போடிபட்டி உட்பட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த மாதம், இச்சாகுபடியில், பரவிய நோய்த்தாக்குதலால், செடிகள் கடுமையாக பாதித்து, மகசூல், பாதியாக குறைந்தது.
நடப்பு சீசனில், அதிக வெயில் காரணமாக, கத்தரி சாகுபடிக்கு, விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இதனால், உடுமலை சந்தைக்கு வரத்து வெகுவாக குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் நேரடியாக, விளைநிலங்களுக்கு சென்று, கத்தரியை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த மாதம், கிலோ, 15 முதல் 20 ரூபாய் வரை இருந்த விலை, தற்போது, கிலோ, 30 முதல் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'கோடை சீசனில், கத்தரி செடிகளில், பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படும். இதனால், பலர் இச்சாகுபடியை, தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், கத்தரிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தால், மகசூல் குறைந்து, விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,' என்றனர்.
