/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
21 நாட்களுக்கு நீர் வழங்க காத்திருப்பு போராட்டம்; ஆழியாறு விவசாயிகள் ஆவேசம்
/
21 நாட்களுக்கு நீர் வழங்க காத்திருப்பு போராட்டம்; ஆழியாறு விவசாயிகள் ஆவேசம்
21 நாட்களுக்கு நீர் வழங்க காத்திருப்பு போராட்டம்; ஆழியாறு விவசாயிகள் ஆவேசம்
21 நாட்களுக்கு நீர் வழங்க காத்திருப்பு போராட்டம்; ஆழியாறு விவசாயிகள் ஆவேசம்
ADDED : ஜன 29, 2024 11:32 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டுக்கு, 21 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என, ஆழியாறு புதிய ஆயக்கட்டு விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்படுகிறது. நடப்பாண்டு பருவமழை பொய்த்ததால், பாசனத்துக்கு முறையாக நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு அடுத்த சுற்றுக்கு, 21 நாட்கள் நீர் வழங்க வேண்டும் என, ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் தலைமையில் திட்டக்குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் தாமோதரனை சந்தித்து வலியுறுத்தினர்.
அதற்கு அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்காததால், ஆழியாறு விவசாயிகள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குழு தலைவர் கூறியதாவது:
ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 44,380 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. சராசரியாக மழைப்பொழிவு உள்ள காலங்களில் குறைந்தபட்சம், 70 - 90 நாட்கள் வரை பாசனத்துக்கு நீர் வினியோகிக்கப்பட்டது.
நடப்பாண்டு, பருவமழை பொய்த்ததால் கடந்தாண்டு நவ., மாதம் கடும் வறட்சியை போக்க, 30 நாட்கள் உயிர் தண்ணீர் வழங்க அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
அப்போது, அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து, 26 நாட்கள் பரிந்துரை செய்து நீர் வழங்கப்பட்டது. அந்த நீரை கொண்டு நிலை பயிர்களை காப்பாற்ற முடிந்தது.
இந்நிலையில், ஓரளவு பருவமழை பெய்து, பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் ஓரளவு நீர் இருப்பு அதிகரித்தது. இதையடுத்து, அடுத்த சுற்றுக்கு கூடுதலாக நீர் வழங்க வேண்டி கடந்த ஒரு மாதமாக இரண்டு கட்ட பேச்சு நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை.
தற்போது, அதிகாரிகளை அணுகி, அணைகளில் உள்ள நீர் இருப்பை கருத்தில் கொண்டு, 21 நாட்களுக்கு, 672 மில்லியன் கனஅடி நீர் வழங்க வேண்டும். அப்போது தான், நிலை பயிர்களை காப்பாற்ற முடியும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால், அதிகாரிகள், 15 நாட்கள் தான் தண்ணீர் வழங்க முடியும் என தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை.மேலும், நீர் பங்கிடும் போது 'வாட்டர் பட்ஜெட்' வழங்கப்படவில்லை. எவ்வளவு நீர் வரத்து, செலவு என்ற புள்ளி விபரங்கள் தெரிவதில்லை.
இதுகுறித்து, எழுத்துப்பூர்வமாக கொடுத்தும், 'வாட்டர் பட்ஜெட்' வழங்குவதில்லை. ஒரு பகுதிக்கு கூடுதலாகவும், மற்றொரு பகுதிக்கு குறைவாகவும் நீர் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிரச்னைக்கு எல்லாம் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
விவசாயிகள், பி.ஏ.பி., அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மாலை, 4:00 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு வரை போராட்டம் நீடித்தது.