‘இ.கே.ஒய்.சி.,’ பணிகள் நிறைவு பெறாமல் சிக்கல் ! ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் குளறுபடி
‘இ.கே.ஒய்.சி.,’ பணிகள் நிறைவு பெறாமல் சிக்கல் ! ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் குளறுபடி
ADDED : நவ 15, 2026 07:32 PM

கிணத்துக்கடவு: ரேஷன்கார்டுதாரர்களின் அடையாளத்தை சரிபார்க்கும் பணிகள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தாலுகாவில், முழுமையடையாமல் இருப்பதால், வினியோகத்திலும் இதர பணிகளிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சிறப்புக்குழு அமைத்து இப்பணிகளை நிறைவு செய்தால் மட்டுமே அனைத்து ரேஷன்கார்டுதாரர்களும் பாதிப்பின்றி பொருட்கள் பெற முடியும்.
பொள்ளாச்சி தாலுகாவில், 168; கிணத்துக்கடவில் 42 மற்றும் ஆனைமலையில் 102 முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் என மொத்தம், 312 கடைகள் வாயிலாக, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன்கார்டு தாரர்களுக்கு பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் அடையாளத்தை சரிபார்க்கும் ‘இ.கே.ஒய்.சி.,’ கட்டாயம் செய்திருக்க வேண்டும் என அறிவித்தது.
இதற்கான பணிகளை ரேஷன் கடை பணியாளர்கள் செய்து வந்தனர். 95 சதவீத பணிகள் முடிந்த நிலையில், மீதம் உள்ள, 5 சதவீத பணிகளை முடிக்க பணியாளர்களுக்கு பல்வேறு வகையில் சிக்கல் ஏற்படுகிறது.
குறிப்பாக, குடும்பத்தில் இறந்த நபர்களின் பெயரை நீக்காமல் இருத்தல், வெளி நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்ற நபர்கள், மருத்துவ சிகிச்சை பெறும் நபர்கள் என, பலர் இன்று வரை இ.கே.ஒய்.சி., செய்யாமல் இருப்பது இப்பணிகள் முழுமை பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாகியுள்ளது.
பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அவ்வப்போது ரேஷன் கடை பணியாளர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இதை முழுமையாக முடிக்க முடியாமல் இன்று வரை சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, அரசு சார்பில் இதற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என, ரேஷன் கடை பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சிறப்பு குழு அமைக்கணும்
இது குறித்து தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது : இ.கே.ஒய்.சி., பணிகள் முடிக்காமல் இருப்பதால், சில ரேஷன் கார்டு தாரர்கள் இதை தவறாக பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, குடும்பத்தில் யாரேனும் இறந்திருந்தால், அந்நபரின் பெயரை நீக்காமல், அவருக்கும் சேர்த்து ரேஷனில் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.
இது போன்று பல்வேறு வகையில் ரேஷன் பொருட்கள் அதிக அளவில் செல்கிறது. இதனால் கடைகளில் பொருட்களின் அளவு குறைவதுடன், மக்களுக்கும், ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சண்டை வருகிறது.
மேலும், அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இப்பணியை முடிக்க வேண்டும் என, ரேஷன் பணியாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இது சாத்தியமில்லை.
எனவே, இதை சரி செய்ய அரசு சார்பில் சிறப்பு குழு அமைத்து, இப்பணியை முடிக்கவோ அல்லது இ.கே.ஒய்.சி., செய்யாத நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
