/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
/
காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
ADDED : ஜன 28, 2025 11:23 PM

வால்பாறை; வால்பாறை அருகே, காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள ஈட்டியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் அன்னலட்சுமி, 67. எஸ்டேட்டில் தொழிலாளியாக பணிபுரிந்து, பணி ஓய்வு பெற்ற நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த, 26ம் தேதி ஈட்டியார் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த யானைகள், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தியது. அப்போது, ரேஷன் கடைக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்னலட்சுமி, அருகில் உள்ள வீட்டிற்கு சென்று பாதுகாப்பாக இருப்பதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது, வீட்டு வாசலில் நின்றிருந்த யானை, அவரை துாக்கி வீசி தாக்கியது. படுகாயமடைந்த அவருக்கு, வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அன்னலட்சுமிக்கு சிகிச்சைக்காக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.
இதனிடையே யானை தாக்கியதில் படுகாயமடைந்த மூதாட்டி, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

