ADDED : பிப் 22, 2026 06:05 AM
கோவை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கையை 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, நியாயமான மற்றும் சுமுகமான முறையில் தேர்தலை நடத்தும் வகையில், தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, தேர்தல் பணிகளுடன் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகள் தங்கள் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதி இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய அதிகாரிகள் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். வரும் மே 31ம் தேதியுடன் மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் அதிகாரிகளுக்கும் இவ்விதி பொருந்தும்.
இந்த இடமாற்ற நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையை வரும் 28ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க, அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவைகலெக்டர் பவன்குமார் கூறுகையில், “மாவட்டத்திற்குள் நீண்டகாலமாக பணியாற்றி வரும் அதிகாரிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
