/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
/
அரங்கநாதர் கோவிலில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : பிப் 19, 2024 02:19 AM

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் மாசிமகத் தேர்த் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும், வெகு விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, கிராம சாந்தி பூஜை செய்யப்பட்டது.
நேற்று காலை 10:00 மணிக்கு (18ம் தேதி) கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடி மரம் முன்பு, கருடாழ்வாருக்கும், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு முன்பாக, கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதை தொடர்ந்து, 11:00 மணிக்கு கொடி மரத்தில், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது வானத்தில் பருந்து வட்டமிட்டது. கொடி ஏற்றும் போது, தாசர்கள் சங்கு ஊதி, சேகண்டி அடித்தனர். இந்த சத்தம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.
பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர். காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர்த்திருவிழா துவங்கியதை, பக்தர்களுக்கு தெரிவிக்கும் வகையில், கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி ஏற்றப்படுகிறது என்பது ஐதீகம்.
வருகிற, 22 ம் தேதி காலை பெட்டத்தம்மன் அழைப்பும், 23 ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண வைபமும் நடைபெற உள்ளது.
24 ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள், தேருக்கு எழுந்தருளுகிறார்.
மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச சுதர்சன பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா, குணசேகரன், அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

