/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் அவசரம்! ஒரே நேரத்தில் பல்வேறு பணிகள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்
/
தேர்தல் அவசரம்! ஒரே நேரத்தில் பல்வேறு பணிகள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்
தேர்தல் அவசரம்! ஒரே நேரத்தில் பல்வேறு பணிகள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்
தேர்தல் அவசரம்! ஒரே நேரத்தில் பல்வேறு பணிகள்; செய்வதறியாது திணறும் ஆசிரியர்கள்
ADDED : மார் 20, 2024 09:58 PM

பொள்ளாச்சி : தேர்தல் பயிற்சி, பொதுத்தேர்வு, விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள், ஒரே மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதால், ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கிய நிலையில் நாளை நிறைவடைகிறது. இதேபோல, பிளஸ் 1 பொதுத்தேர்வு, மார்ச் 4 ல் துவங்கியது. வரும், 25ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் 26 முதல் ஏப்., 8 ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதேபோல, ஒன்று முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 30 ம்தேதி வரையும், 6 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 25ம் தேதி வரையும் பள்ளிகள் செயல்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கேற்ப இந்த வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், பள்ளிகளை ஓட்டுச்சாவடி மையங்களுக்காக தயார்படுத்த வேண்டியுள்ளது.
இதனால், தேர்தலுக்கு முன் அல்லது தேர்தலுக்கு பின் தேர்வை நடத்துவதா என குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல, வரும், 24, ஏப்., 7, 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில், ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
ஒரே மாதத்தில் தேர்தல் பல்வேறு நிலைகளில் பணிகளை மேற்கொள்ள இருப்பதால், ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும், 15ம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. இதன் காரணமாக, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை எப்போது நடத்துவது என்ற குழப்பம் நீடிக்கிறது.
ஏப்., 15ம் தேதிக்குள் ஆண்டு இறுதி தேர்வை முடிக்க, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தினாலும் அதற்கான அறிக்கை பள்ளிகளை வந்தடையவில்லை. இதேபோல, கருவூலம் வாயிலாக சம்பளம் பெறும் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பள அடிப்படையில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அலுவலர் பணியிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இதுவரை துவக்கப்படாமல் உள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டங்களாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட இருப்பதால், அடுத்து வரும் ஒரு மாத காலத்திற்கு ஆசிரியர்கள் விடுமுறையின்றி பணி புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிக்காக பள்ளிகளை தயார்படுத்துவது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் ஒன்று முதல் 9 வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்துவது, விடைத்தாள்கள் திருத்தம், 1 முதல் 9 வகுப்பு தேர்வு மதிப்பெண்களை பதிவிடுவது, தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்பது என, ஒரே மாதத்தில் பல நிலைகளில் பணிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் அனைவரும் திணறி வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

