/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலக் ஷன் ஸ்டன்ட்! முடிக்கப்படாத திட்டத்துக்கு துவக்க விழா
/
எலக் ஷன் ஸ்டன்ட்! முடிக்கப்படாத திட்டத்துக்கு துவக்க விழா
எலக் ஷன் ஸ்டன்ட்! முடிக்கப்படாத திட்டத்துக்கு துவக்க விழா
எலக் ஷன் ஸ்டன்ட்! முடிக்கப்படாத திட்டத்துக்கு துவக்க விழா
ADDED : பிப் 09, 2024 11:03 PM

அன்னுார்:தேர்தலை முன்னிட்டு, அன்னுாரில், 80 சதவீத பணிகள் கூட முடிக்கப்படாத திட்டத்துக்கு, அமைச்சர்களை வைத்து துவக்க விழா நடத்துவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், அன்னுார், சூலுார், திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, திருப்பூர் ஒன்றியங்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதால், கூட்டு குடிநீர் திட்டத்துக்கு திட்டம் தயாரிக்கப்பட்டது.
டெண்டர் விடப்பட்டு, 2020ம் ஆண்டு பிப். 13ம் தேதி, 708 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் ரூ. 362 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் துவங்கின. இப்பணிகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தது. 36 மாதங்களில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
அன்னுார் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், சூலுார் ஒன்றியத்தில் நான்கு ஊராட்சிகள், திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகள், திருப்பூர் ஒன்றியத்தில், சில பகுதிகள் என, 708 குடியிருப்புகளுக்கு தினமும் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் பணிகள் துவங்கின.
சில இடங்களில் ஏற்கனவே உள்ள தரைமட்ட தொட்டி மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மற்ற இடங்களில் புதிதாக நிலமட்ட தொட்டி மற்றும் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டு மாவட்டங்களில், நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் பல லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்தத் திட்டம் நிறைவு பெற்று துவக்க விழா, வரும் 11ம் தேதி சரவணம்பட்டி அருகே நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது, மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து, காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் ஆகியோர் கூறுகையில், 'எங்கள் ஊராட்சியில் கீழ் கதவுகரை, மேல் கதவுகரை ஆகிய கிராமங்களுக்கு இன்னும் 2.5 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்கப்படவில்லை. எஸ்.குரும்பபாளையத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியில் இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட ஏற்றப்படவில்லை.
இதுகுறித்து, கோவை கலெக்டரிடம் கடந்த நவம்பர் மாதம் முறையிட்ட போது, ஜனவரி 1ம் தேதி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்; குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால், இன்னும் 20 சதவீத பணிகளுக்கு மேல் முடிவடையவில்லை. பணிகள் முடியாத திட்டத்தை தேர்தலுக்காக அமைச்சர்களை வைத்து துவக்கி வைக்கின்றனர்' என்றனர்.
கஞ்சப்பள்ளி ஊராட்சி தலைவர் சித்ரா கூறுகையில், ''தாசபாளையம், கஞ்சப்பள்ளி, கஞ்சப்பள்ளி பிரிவு, நீலகண்டன் புதுார் ஆகிய பகுதிகளில் தொட்டிகள் கட்டப்பட்டு ஒரு சொட்டு தண்ணீர் கூட இதுவரை ஏற்றப்படவில்லை.
குழாய் பதிக்கும் பணி பல கிலோமீட்டர் துாரத்துக்கு அனைத்து கிராமங்களிலும் 50 சதவீதம் கூட முடியவில்லை. ஆனால், தற்போது திட்டம் முடிக்கப்பட்டு துவக்க விழா நடைபெறுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைவில் பணிகளை முடித்து, தொட்டிகளில் நீரேற்றி ஆற்று நீரை கிராம மக்களுக்கு வழங்க வேண்டும்,'' என்றார்.
பொகலுார் ஊராட்சி தலைவர் நடராஜன் கூறுகையில், ''எங்கள் ஊராட்சியில் குழாய் பதிக்கும் பணி 80 சதவீதம் கூட முடியவில்லை. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது,'' என்றார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, முடிவடையாத திட்டத்துக்கு துவக்க விழா நடத்த ஆர்வம் காட்டும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.