ADDED : ஏப் 22, 2026 04:33 PM

வால்பாறை: வால்பாறையில், தேர்தல் பணி ஒதுக்கீட்டில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக ஆசிரியர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை சட்டசபை தொகுதியில் மலைப்பகுதி மற்றும் ஆனைமலை பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் சட்டசபை தொகுதியில் ஏப்ரல் 23 ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில், 130 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஒதுக்கீடு குறித்த உத்தரவு நேற்று காலை வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லுாரியில் வருவாய்த்துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
இதில் பெரும்பலான ஆசிரியர்களுக்கு சமவெளிப்பகுதியில் உள்ள ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை போன்ற பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டது. காலை, 11:30 மணிக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் உத்தரவு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் சமவெளிப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும் என கூறுகின்றனர். கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட உத்தரவு எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வால்பாறை ஓட்டுச்சாவடிகளிலேயே பணிபுரிய உத்தரவு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் தான் ஆசிரியர்கள் நியமிக்கபட்டுள்ளனர். பெரும்பாலான ஆசிரியர்களுக்கு வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளிலேயே பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித குளறுபடியும் இல்லை. இதுபற்றி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தியதும், அவர்கள் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு சென்றுள்ளனர்,' என்றனர்.
