ADDED : அக் 21, 2024 04:32 AM
பெ.நா.பாளையம், ; வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், மழைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய மின்சார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம், பொது மக்களுக்கு விநியோகம் செய்தது.
பெரியநாயக்கன்பாளையத்தில் இம்மையத்தின் இயக்குனர் சகாதேவன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதில் பொதுமக்கள், மின்கம்பி அறுந்து கிடக்கும் இடத்துக்கு அருகே செல்லக் கூடாது.
மின் கம்பி அறுந்து கிடந்தால், உடனடியாக அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விவசாய பணியின் போது, நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள இழுவை கம்பியை அகற்றுதல் கூடாது. தாழ்வாக செல்லும் மின் பாதைகள் இருப்பின் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
மழை, பெருங்காற்று சமயங்களில் மின் கம்பம் அருகிலோ, மின் மாற்றி அருகிலோ செல்லக்கூடாது. வீட்டிலோ, கடைகளிலோ பழுதான மின் இணைப்புக்கான ஒயர்களை உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றிக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள மின் காப்புத்திறன் இழந்த மின்சார ஒயர்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
ஈரமான கைகளைக் கொண்டு மின் சாதனத்தை இயக்கக் கூடாது. பழுதான சுவிட்சுகளை வைத்து மின்சாதனங்களை இயக்கக் கூடாது. வீடு, கடை, கட்டடங்களில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பாதுகாப்பான முறையில் மின்சார ஒயர்கள் செல்லுமாறு அமைக்க வேண்டும் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தன.