/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 07, 2025 11:32 PM
கோவை; தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு கோவை மண்டலம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம், டாடபாத் தலைமை மின் பொறியாளர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. போராட்டத்தை கோவை மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி மாற்றம் செய்தல், ஆறு சதவீத ஊதிய உயர்வு, சொந்த மாவட்டங்களுக்கு ஊர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்திய மின் ஊழியர்கள் கூட்டமைப்பு பொருளாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''2019 டிச., முதல் வழங்க வேண்டிய ஆறு சதவீத ஊதிய உயர்வு, இட மாற்றம் என்று அல்லாமல் சொந்த ஊரில் பணிபுரிய ஊர் மாற்றம் வழங்குதல், கள உதவியாளர் பதவி மாற்றம் ஆகியவற்றை அரசு உடனடியாக செய்ய முடியும்.
முடிந்த அனைத்தையும் உடனடியாகவும், கொள்கை சார்ந்தவற்றுக்கு உறுதிமொழியும் அரசு வழங்க வேண்டும். இதுவரை, 84 கேங்மேன் மின்விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மின்வாரியத்தில் உள்ள காலியிடங்களுக்கு உரிய பணிகளை இவர்களை வைத்தே நிறைவேற்றுகின்றனர்.
அரசு பேச்சுக்கு அழைக்காவிடில் போராட்டத்தை தொடர உள்ளோம். களத்தில் அனைத்து புகார்களையும் எதிர்கொண்டு சரிசெய்யும் கேங்மேன்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் உள்ளனர், '' என்றார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஓ.டி.இ.இ., மாநில செயலாளர் மணிகண்டன், மாநில துணை தலைவர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.