ADDED : அக் 07, 2025 11:32 PM
தவறி விழுந்து ஓட்டல் ஊழியர் பலி
கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் உள்ள ஓட்டலில், சிவகங்கை மாணிக்கநேந்தலை சேர்ந்த பாரதிராஜா, 22, ரூம் பாயாக பணிபுரிந்து வந்தார். 5ம் தேதி மது அருந்திய பாரதிராஜா ஓட்டலின் ஐந்தாவது மாடிக்கு துாங்கச் சென்றார். மதுபோதையில் மாடியில் இருந்து கார் பார்க்கிங் பகுதியில் விழுந்து படுகாயம் அடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்
நாய் மீது கார் மோதல்
இடையர்பாளையம் ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் காயத்திரி. விலங்கு நல வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் முன் நாய் ஒன்று படுகாயமடைந்து இருப்பதை பார்த்து மருத்துவமனையில் அனுமதித்தார். அவரது வீட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரோட்டில் படுத்திருந்த நாய் மீது கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் செல்வது தெரிந்தது. இந்திய விலங்கு நல வாரியத்தில் பணிபுரியும், கோவை உப்பிலிபாளையம் ஆர்ச் ரோட்டை சேர்ந்த தினேஷ்குமார், 32 என்பவரிடம் காயத்ரி தெரிவித்தார். தினேஷ்குமார் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பைக் மோதி மூதாட்டி பலி
செல்வபுரம் பசுமை நகரை சேர்ந்தவர் மருதா, 72. கடந்த, 1ம் தேதி அவிநாசி ரோட்டை கடக்க முயன்றார். அவ்வழியாக வந்த பைக் ஒன்று மருதா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.