/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை காலத்தில் மின் விபத்து தவிர்க்க அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரியம்
/
மழை காலத்தில் மின் விபத்து தவிர்க்க அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரியம்
மழை காலத்தில் மின் விபத்து தவிர்க்க அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரியம்
மழை காலத்தில் மின் விபத்து தவிர்க்க அறிவுரை விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்வாரியம்
ADDED : அக் 22, 2025 10:56 PM
பொள்ளாச்சி: மழை காலத்தில் மின்விபத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், என, பொதுமக்களிடம் மின்வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், பல இடங்களில் ரோடுகளில் மழைநீர் வழிந்தோடுகிறது.
இந்நிலையில், மழை காலத்தில் மின்விபத்தை தவிர்க்க முன் எச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா கூறியிருப்பதாவது:
மழை காலத்தில் மின்மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக்கூடாது. வீடுகளில் ஈரமான இடத்தில் மின் சுவிட்சுகளை பொருத்தக்கூடாது. ஈரமான கைகளால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது.
இடி, மின்னலின் போது தஞ்சமடைய மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மரங்கள், உலோக கம்பிவேலிகள் இவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனேயே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்சை அணைக்க வேண்டும். மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள், கிளைகளை வெட்டும் போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, அந்த மின் பாதையில் மின்தடை செய்த பின் வெட்ட வேண்டும்.
இடி, மின்னலின் போது, 'டிவி', மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
கட்டடங்களுக்கும், மின் பாதைக்கும் இடையில் போதிய இடைவெளி இருக்குமாறு கட்டடங்களை அமைக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும், 'மெயின் சுவிட்ச் போர்டில்' ஆர்.சி.டி. பயன்படுத்தி மின்கசிவினால் ஏற்படும் மின் விபத்தை தவிர்க்க வேண்டும்.
மின்கம்பங்களை பந்தல் அமைக்க நிலைக்காலாக பயன்படுத்துவதோ, விளம்பர பதாகைகளை பொருத்துவதோ கூடாது.
கனரக வாகனங்களை மின்கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.
மின்கம்பத்திலோ, கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு, நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் வாயிலாக மின் இணைப்பு கொடுக்க வேண்டும். மின்சாரத்தில் ஏற்படும் தீயை தண்ணீரை கொண்டு அணைக்க வேண்டாம். தாழ்வான மின்பாதைகள், பழுதடைந்த மின்கம்பங்களை மின்வாரிய கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
அவசர உதவிக்கு பொள்ளாச்சி துணை மின்நிலையம், 94458 51604, கோமங்கலம் துணை மின்நிலையம், 94990 50502, மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின்நிலையம், 94458 51611, முத்துார் துணை மின்நிலையம், 94999 76889, சமத்துார் துணை மின்நிலையம், 94999 76890, ஆலமரத்துார் துணை மின்நிலையம், 94999 76864 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

