/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு கடைகளுக்கு மின் இணைப்பு; உரிய ஆவணம் கோரும் மின்வாரியம்
/
பட்டாசு கடைகளுக்கு மின் இணைப்பு; உரிய ஆவணம் கோரும் மின்வாரியம்
பட்டாசு கடைகளுக்கு மின் இணைப்பு; உரிய ஆவணம் கோரும் மின்வாரியம்
பட்டாசு கடைகளுக்கு மின் இணைப்பு; உரிய ஆவணம் கோரும் மின்வாரியம்
ADDED : அக் 08, 2025 11:09 PM
பொள்ளாச்சி; தற்காலிக பட்டாசு கடைகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கு, உரிய ஆவணங்களை வழங்க வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு, பொள்ளாச்சி நகரில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். குறிப்பாக, அக்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டுதல்களையும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 9 ச.மீ., முதல் 25 ச.மீ., வரை காலியிடம் இருப்பது அவசியம். கடைக்கான புல வரை படம், சாலை வசதி, சுற்றுப்புற தன்மை, கடை கொள்ளளவு ஆகியவை தெளிவாக குறிப்பிட்டு, புல வரை படம் இணைத்தல் வேண்டும்.
உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டில் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டடமாக இருப்பின் உரிமையாளர் சொத்து வரி செலுத்திய அசல் ரசீது, நகலுடன் கட்டட உரிமையாளரிடம், 20 ரூபாய்க்கான முத்திரைத்தாளில் பெற்ற சம்மத கடிதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டுமே மின் இணைப்புக்கான (கமர்ஷியல்) அனுமதி வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மின்வாரியத்தினர் கூறியதாவது:
தற்காலிக பட்டாசு கடைகளுக்கு மின் இணைப்பு பெற விரும்புவோர், கடை வைப்பதற்தான அனுமதி கடிதம் தர வேண்டும். குறிப்பாக, மொத்த கடைகளை உள்ளடக்கிய அனுமதி பட்டியல் மற்றும் தீயணைப்பு துறையின் பாதுகாப்பு சான்று அவசியம்.
அருகில் உள்ள கடைகளில் இருந்து, மின் இணைப்பு பெற கோரினால், அந்த கட்டட உரிமையாளரின் தடையில்லா சான்றும் வழங்க வேண்டும். விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.