ADDED : செப் 23, 2025 11:09 PM

கோவை; மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், கோவை டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு (சி.ஐ. டி.யு.) சார்பில், நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'மின்வாரியத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பி.எப்., பிடிக்க வேண்டும், பிரிவுக்கு இரண்டு பேரை கள உதவியாளராக ஒப்பந்தம் வாயிலாக நியமிக்கும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சங்கத்தின் மாநில செயலாளர் மணிகண்டன் கூறுகையில், ''ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தலின்போது, தி.மு.க. அரசு தெரிவித்தது. இன்னும் பணி நிரந்தரம் செய்யவில்லை. முந்தைய அ.தி.மு.க., அரசும் எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இனியும் பணி நிரந்தரம் செய்யவில்லை எனில், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து, மாநில தலைமையுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.
மாநகர கிளை தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மூன்று பெண்கள் உட்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.