/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு கொட்டகையை சேதப்படுத்திய யானை
/
மாட்டு கொட்டகையை சேதப்படுத்திய யானை
ADDED : ஏப் 23, 2025 11:05 PM

பெ.நா.பாளையம், ; சின்னதடாகம் அருகே வீரபாண்டி புதூரில் உள்ள தோட்டத்தில் மாட்டு கொட்டகையை காட்டு யானை சேதப்படுத்தியது.
கோவை வடக்கு புறநகர் பகுதிகளில் காட்டு யானைகளின் தொந்தரவு தினசரி அதிகரித்து வருகிறது. வேளாண் நிலங்களுக்குள் புகும் யானைகள், காட்டு பன்றிகள், பயிர்களை சேதப்படுத்துகின்றன. வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், வனவிலங்குகளின் தொல்லைகளை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
இந்நிலையில், சின்னதடாகம் அருகே வீரபாண்டி புதூரில் சுந்தரேசன் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, அங்கிருந்த மாட்டு கொட்டகையை கீழே தள்ளி சேதப்படுத்தியது. அதே பகுதியில் சிறிது நேரம் சுற்றித்திரிந்த ஒற்றையானை பின்னர் மலையடிவாரம் நோக்கி சென்றது.
இது குறித்து, விவசாயி சுந்தரேசன் கூறுகையில், காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள, 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தோம். காட்டு யானைகளின் தொந்தரவால் தற்போது இந்த பூமி வெறும் தரிசாக கிடக்கிறது.
இரவு நேரங்களில் காட்டு யானைகளின் தொந்தரவால், தோட்டத்து சாளைகளில் விவசாயிகள் தங்க முடிவதில்லை. வேளாண் பயிர்களுக்கான நஷ்ட ஈடும் குறைவாகவே வழங்கப்படுகிறது. அவையும் குறித்த நேரத்தில் கிடைப்பதில்லை. வனவிலங்குகளின் தொந்தரவுக்கு நிலையான தீர்வு ஏற்பட்டால் மட்டுமே, மலையோர கிராமங்களில் விவசாயிகள், வேளாண் தொழிலை தொடர்ந்து செய்ய முடியும் என்றார்.

