ADDED : மார் 04, 2026 05:03 AM
மேட்டுப்பாளையம்: 'காரமடை அருகே கட்டாஞ்சி மலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அச்சாலையில் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்' என, வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரமடை மருதுார் அருகே கட்டாஞ்சி மலை உள்ளது. கோவையின் குடிநீர் திட்டங்களுக்கு, பில்லுார் அணையில் இருந்து வரும் ராட்சத குழாய்கள், மலையை குடைந்து, சுரங்கம் அமைத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டாஞ்சி மலை உச்சியில் உள்ள தண்டிகை பெருமாள் கோவிலுக்கு, சனிக்கிழமைகளில், திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவையில் இருந்து வருவோர், பெரியநாயக்கன்பாளையம், கட்டாஞ்சி மலைப்பாதை சாலை வழியாக வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம், வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மஞ்சூர், தோலம்பாளையம், கோபனாரி போன்ற கிராமங்களுக்கு செல்ல முடியும். கட்டாஞ்சி மலைப்பாதையில் தற் போது யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
காரமடை வனத்துறையினர் கூறுகையில், 'கட்டாஞ்சி மலையில் யானைகள் நடமாட்டம் உள்ளது. அவ்வழியாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். யானைகளை கண்டால் 'செல்பி' எடுக்க முயற்சிக்கக் கூடாது. வன விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.----
