/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட்டில் யானை; தொழிலாளர்கள் அச்சம்
/
எஸ்டேட்டில் யானை; தொழிலாளர்கள் அச்சம்
ADDED : நவ 11, 2025 10:39 PM

வால்பாறை: தேயிலை எஸ்டேட்டில், காலை நேரத்தில் யானை முகாமிட்டதை கண்டு தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின், வனவளம் பசுமையாக உள்ளதால், பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. குறிப்பாக, புதுத்தோட்டம், பன்னிமேடு, சோலையாறு, முத்துமுடி, ேஷக்கல்முடி உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், புதுத்தோட்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்ட ஒற்றை யானை, அருகில் உள்ள சவராங்காடு எஸ்டேட் பகுதிக்கு அதிகாலை நேரத்தில் சென்றது. தொழிலாளர்கள் பணிக்கு செல்லும் நேரத்தில் யானை முகாமிட்டதால், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள் அச்சத்துடன் காத்திருந்தனர்.
இதே போல், முடீஸ் பகுதியில் யானைகள் பகல் நேரத்தில் குட்டிகளுடன் முகாமிட்டதால், அந்தப்பகுதியிலும் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாமல் திரும்பினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாமிட்டால் அந்த பகுதியில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லக்கூடாது. யானைக்கு மிக அருகில் சென்று 'செல்பி' மற்றும் வீடியோ எடுப்பதை சுற்றுலா பயணியர் தவிர்க்க வேண்டும். யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே எஸ்டேட் தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை,' என்றனர்.

