/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடுகளை சேதப்படுத்திய யானைகள்; விரட்ட முடியாமல் மக்கள் தவிப்பு
/
வீடுகளை சேதப்படுத்திய யானைகள்; விரட்ட முடியாமல் மக்கள் தவிப்பு
வீடுகளை சேதப்படுத்திய யானைகள்; விரட்ட முடியாமல் மக்கள் தவிப்பு
வீடுகளை சேதப்படுத்திய யானைகள்; விரட்ட முடியாமல் மக்கள் தவிப்பு
ADDED : நவ 21, 2024 09:31 PM

வால்பாறை ; வால்பாறை அடுத்துள்ளது கவர்க்கல் எஸ்டேட். இங்கு, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, குட்டியுடன் வந்த ஒன்பது யானைகள், தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அங்கு, ராஜன், குட்டிராஜா, ஆறுமுகம், வசந்தி, ஆனந்தகுமார் உட்பட, 7 பேரின் வீடுகளை இடித்து சேதப்படுத்தின.
யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதை அறிந்த தொழிலாளர்கள், வீட்டின் பின் பக்கம் வழியாக வெளியேறி தப்பினர். அதன்பின், அருகில் உள்ள மாரியம்மன் கோவில் முகப்பு வாயிலையும் யானைகள் இடித்து சேதப்படுத்தின.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை வேட்டை தடுப்புக்காவலருடன், எஸ்டேட் பகுதி மக்கள் இணைந்து, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். தகவல் அறிந்த எஸ்டேட் மேலாளர், வார்டு கவுன்சிலர் கனகமணி மற்றும் வனத்துறையினர் யானையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.
தொழிலாளர்கள் கூறியதாவது: சக்தி - தலனார் செல்லும் வழியில் உள்ள கவர்க்கல் எஸ்டேட் பகுதியில், யானைகள் எதிர்பாராதவிதமாக கூட்டமாக வந்தன. அரை மணி நேரத்தில், 7 தொழிலாளர்களின் வீடுகளின் கதவு, ஜன்னல், சுவர்களை இடித்து பொருட்களை சேதப்படுத்தின.
யானையை விரட்ட சென்ற ஒரே ஒரு வேட்டை தடுப்புக்காவலரையும் யானை விரட்ட துவங்கியது. அதன்பின் தொழிலாளர்கள் ஒன்றாக சென்று, ஒரு மணி நேரத்திற்கு பின் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினோம்.
இவ்வாறு, கூறினர்.