UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 06:06 PM
வால்பாறை: வால்பாறை அருகே, ரேஷன் பொருட்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டினர்.
வால்பாறை அடுத்துள்ள சின்கோனா(டான்டீ) முதல் பிரிவில், சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடிக்கு சொந்தமான ரேஷன் கடையில், மொத்தம், 193 ரேஷன் கார்டுகள் உள்ளன. இங்கு பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய ரேஷன் பொருட்கள் கடையில் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரேஷன் கடைக்கு சென்ற யானைக்கூட்டம் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து, உள்ளே இருந்த இரண்டு மூட்டை கோதுமையை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். சின்கோனா (டான்டீ) தேயிலை தோட்டத்தில் யானைகள் நிரந்தரமாக முகாமிட்டு, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்துகின்றன, என, தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
