ADDED : ஆக 10, 2025 10:11 PM
வால்பாறை; வால்பாறை, வெள்ளமலை பகுதியில் ரேஷன் கடையில் இருந்த பொருட்களை யானைகள் சேதப்படுத்தின.
கோவை மாவட்ட எல்லையில் உள்ள சுற்றுலா ஸ்தலமான வால்பாறையில், யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் வால்பாறை அடுத்துள்ள வெள்ளமலை மட்டம் பகுதியில், மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடையில், மொத்தம், 70 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூட்டமாக வந்த யானைகள், கடையை இடித்து உள்ளே இருந்த ரேஷன் பொருட்களை வெளியே இழுத்து சேதப்படுத்தின. இதனால் கடையில் இருந்த 100 கிலோ சர்க்கரை, மூன்று மூட்டை அரிசியும் சேதமானது. இதையடுத்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'ரேஷன் கடையில் இருந்து பொருட்களை யானைகள் சேதப்படுத்தின. இதனால், மாதம் தோறும் வழங்க வேண்டிய சர்க்கரை, அரிசி வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

