ADDED : பிப் 20, 2025 11:24 PM
வால்பாறை; வால்பாறை அருகே, ஆற்றில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த யானைகளை சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக, கெஜமுடி, வில்லோனி, இஞ்சிப்பாறை, குரங்குமுடி, வாகமலை, புதுத்தோட்டம், சின்னக்கல்லார் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.
சில எஸ்டேட்களில் தொழிலாளர்கள் காலை நேரத்தில் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லும் போது, யானைகள் முகாமிடுவதால் தொழிலாளர்கள் வேறு தேயிலை எஸ்டேட்டில் பணிக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், கெஜமுடி 'டனல்' பகுதியில் உள்ள ஆற்றில், 10க்கும் மேற்பட்ட யானைகள் குட்டியுடன் ஆனந்தமாக குளித்தன. வால்பாறையில் பகல் நேரத்தில் வெயில் நிலவும் நிலையில், யானைகள் ஜாலியாக குளிப்பதை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில், முகாமிட்ட யானைகள் தண்ணீர் குடிக்க ஆற்றிற்கு சென்றன. சிறிது நேரம் குளித்த பின், கெஜமுடி எஸ்டேட் வனப்பகுதிக்குள் கூட்டமாக சென்றன.
யானைகளின் அருகில் சென்று சுற்றுலா பயணியர் புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாமிட்டால், அந்த எஸ்டேட் அதிகாரிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.

