/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் பீதி
/
யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் பீதி
ADDED : ஜன 08, 2024 10:54 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வீடுகளை இடிக்கும் காட்டு யானைகளால், விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர்.
கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கோவனுார், நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, சோளம் உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களாக கூட்டம், கூட்டமாக திரியும் யானைகள், பெருத்த பயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சில யானைகள் அங்கு நன்கு வளர்ந்து உள்ள, 20 அடி உயரம் உள்ள தென்னை மரங்களையும் முட்டி, தள்ளி சாய்த்து விடுகின்றன. இதே போல, தோட்டங்களில் உள்ள ஓட்டு வீடுகளின், ஓடுகளை பிரித்து சேதம் ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டத்தில் தங்குவதை தவிர்த்து வருகின்றனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறுகையில், ''கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் வரவு மிக அதிகமாக உள்ளது. யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் என, வனத்துறையினருக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. 20 ஆண்டுகள், பல ஆயிரம் ரூபாய் செலவழித்து வளர்த்த தென்னை மரங்களை, சில நிமிடங்களில், யானைகள் வேருடன் சாய்த்து விடுகின்றன. இப்பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என, தெரியவில்லை'' என்றனர்.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், ''யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் விடிய, விடிய ஈடுபட்டு வருகின்றனர்.
மலையோர கிராமங்களில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
இதே போல, இரவு நேரங்களில் வாகனங்களில் மலை பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும்'' என்றனர்.