/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பில் யானைகள் நடமாட்டம்; தொழிலாளர்கள் பரிதவிப்பு
/
குடியிருப்பில் யானைகள் நடமாட்டம்; தொழிலாளர்கள் பரிதவிப்பு
குடியிருப்பில் யானைகள் நடமாட்டம்; தொழிலாளர்கள் பரிதவிப்பு
குடியிருப்பில் யானைகள் நடமாட்டம்; தொழிலாளர்கள் பரிதவிப்பு
ADDED : செப் 07, 2025 09:15 PM
வால்பாறை; தமிழக -- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில் பருவமழைக்கு பின், கேரளாவில் இருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனியாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக, புதுத்தோட்டம், கருமலை, இஞ்சிப்பாறை, முருகன் எஸ்டேட், உருளிக்கல், முடீஸ், முத்துமுடி, நல்லமுடி, பன்னிமேடு, வில்லோனி உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
பகல் நேரத்தில் தேயிலை காட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை, பலா போன்றவைகளை உட்கொள்கின்றன. அதன்பின் தொழிலாளர்களின்வீடு மற்றும் கடைகளையும் சேதப்படுத்தி வருவதால், தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் யானைகள் நடமாடும் பகுதிக்கு, சுற்றுலாபயணியர் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் முகாமிட்டிருந்தால் அங்கு தேயிலை பறிக்க தொழிலாளர்களை எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்க கூடாது. யானைகள் நடமாடும் பகுதியில் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
'வாட்ஸ்அப்' தகவல் எஸ்டேட் பகுதியில் தனித்தனியாக யானைகள் முகாமிட்டிருந்தால், அது குறித்த தகவல்களை வனத்துறையினர் வாட்ஸ்அப் வாயிலாக தொழிலாளர்களுக்கு தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர், 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், சமீப காலமாக யானைகள் - மனித மோதல் குறைந்துள்ளது.