ADDED : பிப் 18, 2024 11:07 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மரக்கிடங்கு தண்ணீர் தொட்டியில் யானை கூட்டங்கள் தண்ணீர் அருந்த அதிக அளவில் வருகின்றன.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் அரசு மரக்கிடங்கு அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் தாகம் தீர்க்க பெரிய அளவில் வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேட்டுப்பாளையம், கோத்தகிரி, சிறுமுகை, குன்னூர் வனப்பகுதிகளில் உள்ள யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வந்து தண்ணீர் அருந்தி செல்லும். தற்போது கோடை காலம் நெருங்கும் நிலையில் இந்த தண்ணீர் தொட்டியை தேடி யானை கூட்டங்களின் வருகை அதிகரித்து வருகிறது. யானை கூட்டங்களை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறுகையில், அரசு மரக்கிடங்கு தண்ணீர் தொட்டியில் தினமும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இங்கு தண்ணீர் அருந்த வரும் வனவிலங்குகள், ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிக அளவில் யானை, மான் தான் கூட்டம் கூட்டமாக இங்கு தண்ணீர் அருந்த வருகின்றன. யானை கூட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம், என்றனர்.--

