/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்; பி.எப்., நிறுவன அதிகாரிகள் அழைப்பு
/
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்; பி.எப்., நிறுவன அதிகாரிகள் அழைப்பு
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்; பி.எப்., நிறுவன அதிகாரிகள் அழைப்பு
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம்; பி.எப்., நிறுவன அதிகாரிகள் அழைப்பு
ADDED : ஜூலை 08, 2025 09:08 PM
- நமது நிருபர் -
மத்திய அரசின், வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இ.எல்.ஐ.,) திட்டத்தால், தொழிலாளர் மட்டுமல்ல தொழில் நடத்துவோரும் பயன்பெறலாம் என, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிநிறுவன அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்திட்டத்தில், முதன்முறையாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு, மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் வரையுள்ள, அனைத்து புதிய தொழிலாளர்களுக்கும், அதிகபட்சமாக, இரண்டு தவணைகளாக, மொத்தம் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தொடர்ச்சியாக ஆறு மாதம் பணியாற்றிய பின் முதல்கட்ட தொகையும், 12 மாதங்களுக்கு பின் இரண்டாம் கட்ட தொகையும் விடுவிக்கப்படும்.
தொழில்நடத்தும் உரிமையாளர்களுக்கும், ஒவ்வொரு புதிய தொழிலாளரை நியமித்தால், மாதம், 3 ஆயிரம் ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்; உற்பத்தி துறையாக இருந்தால், கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இ.எல்.ஐ., திட்டம், நேரடி பயனளிப்பு மற்றும் பரிமாற்றங்கள் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
ஆதார் இணைக்கப்பட்ட இ.பி.எப்.ஓ., கணக்குகள், தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகையை நேரடியாக வழங்கும். 'பான்' கார்டு இணைக்கப்பட்ட நிறுவன கணக்குகள் வாயிலாக, தொழில் நடத்துவோருக்கான ஊக்கத்தொகை விடுவிக்கப்படும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின், மண்டல கமிஷனர் (எண்: 2) அன்சுல்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய அரசின், வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தில், தொழிலாளர் மட்டுமல்ல, தொழில் நடத்துவோரும், ஊக்கத்தொகை பெறலாம். வேலை வாய்ப்பு உருவாக்கம், நாட்டின் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறை வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்பான முழு விபரங்களையும், பலன்களையும் பெற, தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, திருப்பூர் மண்டலத்தில் உருவாக்கப்பட்டுள்ள, 'இ.எல்.ஐ., - உதவி மையத்தை அணுகலாம்,' என்று கூறியுள்ளார்.