/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்
ADDED : அக் 15, 2025 11:52 PM

பெ.நா.பாளையம்: கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையம் உயர் மட்ட மேம்பாலத்திற்கு கீழ் பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஜோதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தாராளமாக செல்ல சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பாதையின் நடுவே திட்டு போன்ற பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதை சிறு வியாபாரிகள், தங்களுடைய வியாபார தளங்களாக ஆக்கி கொண்டனர். இதனால் புறநகர் மற்றும் உள்ளூர் டவுன் பஸ்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பொதுமக்கள் கூறுகையில்,' பாலத்துக்கு கீழே ரோட்டின் நடுவில் உள்ள திட்டுப் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் திரண்டு நிற்பதால், பஸ்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய போலீசாரும் வேடிக்கை பார்ப்பது வேதனையிலும் வேதனை' என்றனர். இது குறித்து கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட இன்ஜினியர் விடுத்துள்ள அறிவிப்பில், கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சர்வீஸ் ரோட்டின் இருபுற ஓரங்களிலும், நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அதை ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களாகவே முன்வந்து இம்மாதம், 17ம் தேதிக்குள் அகற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தவறும் பட்சத்தில், 17ம் தேதிக்கு பின்னர் தேசிய நெடுஞ்சாலை துறை வாயிலாக ஆக்கிரமிப்பு அகற்றப்படும். இதற்கான செலவினத்திற்கும் ஆக்கிரமிப்பாளர்களே பொறுப்பு என, கூறப்பட்டுள்ளது.