/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டைஊசி வளைவுகளில் அத்துமீறல்; சுற்றுலா பயணியரால் விபத்து அபாயம்
/
கொண்டைஊசி வளைவுகளில் அத்துமீறல்; சுற்றுலா பயணியரால் விபத்து அபாயம்
கொண்டைஊசி வளைவுகளில் அத்துமீறல்; சுற்றுலா பயணியரால் விபத்து அபாயம்
கொண்டைஊசி வளைவுகளில் அத்துமீறல்; சுற்றுலா பயணியரால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 23, 2025 09:05 PM

வால்பாறை; ஆழியாறில் இருந்து, வால்பாறை செல்லும் வழித்தடத்தில், கொண்டைஊசி வளைவுகளில் அத்துமீறி சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்துவதால், விபத்து அபாயம் உள்ளது.
வால்பாறைக்கு தினமும், நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. சுற்றுலா வாகனத்தில் மலைப்பாதையில் விபத்து ஏற்படாமல் இருக்க, 40 கொண்டை ஊசி வளைவுகளிலும், குவிக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், சமீப காலமாக மலைப்பாதையில் விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளன.
இந்நிலையில், மலைப்பாதையில் ஒன்பதாவது கொண்டைஊசி வளைவில், ஆழியாறு 'வியூ பாயின்ட்' உள்ளது. இங்கு, சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் உள்ளே செல்ல தடை விதித்து, தடுப்பு வேலியும் அமைத்துள்ளனர்.
ஆனால், வார விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணியர் தடை செய்யப்பட்ட ஒன்பதாவது கொண்டைஊசி வளைவில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி 'செல்பி' எடுக்கின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டுநர்கள் வளைவுகளில் திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சிலர், உணவு சாப்பிடுவதுடன், உணவு கழிவு, பொட்டலத்தை அங்கேயே விட்டு செல்கின்றனர். ரோட்டோர தடுப்புகளில் அமர்ந்து, குளிர்பான பாட்டில்களில் ஊற்றி வரும் மதுவை அருந்துகின்றனர்.
வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதுடன், போட்டோ எடுக்கின்றனர். இதனால், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
ஆபத்து நிறைந்த பகுதியில் சுற்றுலா பயணியர் அத்துமீறி செல்வதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். மேலும், மலைப்பாதையில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், வனவிலங்குகளுக்கு உணவு வழங்குவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த கொண்டைஊசி வளைவுகளில், சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.