/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோர நடைபாதை ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்பு
/
ரோட்டோர நடைபாதை ஆக்கிரமிப்பு; பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 01, 2025 11:28 PM

சேதம் அடைந்த ரோடு
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் இருந்து, பகவதிபாளையம் செல்லும் இணைப்பு ரோடு முன் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அதிக அளவு தடுமாற்றம் அடைகின்றனர். எனவே, இந்த ரோட்டை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.
--- கருப்பு சாமி, கிணத்துக்கடவு.
சர்வீஸ் ரோட்டில் குழி
கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதி மற்றும் ஒன்றிய அலுவலகம் செல்லும் சர்வீஸ் ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் செல்ல சிரமப்படுகின்றனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த ரோட்டில் ஏற்பட்ட குழியை விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.
-- ரமேஷ், கிணத்துக்கடவு.
ரோட்டில் கழிவு நீர்
பொள்ளாச்சி, ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடிய படி இருப்பதால்,வாகன ஓட்டுநர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- பாலாஜி, பொள்ளாச்சி.
ரோட்டோர கிளைகளை வெட்டணும்
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானாவின் ஒரு பகுதியில் ரோட்டோர மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே, ரோட்டில் நீட்டிய படி இருக்கும் கிளைகளை வெட்ட நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
நடைபாதை ஆக்கிரமிப்பு
வால்பாறை நகரில், ஒரு சில பகுதிகளில் ரோட்டோர நடை பாதை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக நடந்து செல்பவர்கள் முதல் வாகன ஓட்டுநர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- காவியா, வால்பாறை.
'லொள்' தொல்லை அதிகரிப்பு
உடுமலை பாபுகான் வீதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் குடியிருப்புகளிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பாகவே, ரோடு முழுவதும் பரப்பி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. மேலும்,வாகன ஓட்டுநர்களை பகல் நேரத்திலும் துரத்திச்சென்று அச்சுறுத்தலை உண்டாக்குகிறது.
- கணபதி, உடுமலை.
செடிகளை அகற்றணும்
உடுமலை -- கொழுமம் ரோடு ரயில்வே கேட் அருகே செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது, இடையூறு ஏற்படுகிறது. எனவே, இச்செடிகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுகுமார், உடுமலை.
கட்டுமான பொருட்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சரவணா வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டுநர்கள் ஏற்கனவே அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ரோட்டின் பாதிவரை கட்டுமான பொருட்களை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் மண் குவியல் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்வதற்கும் இடமில்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
- ராமதிலகம், உடுமலை.
வேகத்தடை வேண்டும்
உடுமலை, பழனியாண்டவர் ரவுண்டானா அருகே வாகனங்கள் அதிவேகமாக வந்து திரும்புகின்றன. வேகத்தடை இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள் திரும்பும்போது கட்டுபாடில்லாமல் அருகில் செல்லும் பாதசாரிகள் மீதும் விடுகின்றனர். அப்பகுதியில் வாகன வேகத்தை கட்டுபடுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- சரண்ராஜ், உடுமலை.
'குடி' மகன்கள் தொல்லை
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பின்புறம், அனுஷம் ரோட்டில் 'குடி'மகன்கள் ரோட்டில் இரவு நேரங்களில் நிலையில்லாமல் தாறுமாறாக செல்கின்றனர். இவ்வாறு செல்வதால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். அப்பகுதியில் வெளிச்சம் குறைவாக இருப்பதால், பெண்கள் மாலை நேரங்களில் அவ்வழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.
- திருமூர்த்தி, உடுமலை.
மழைநீர் தேக்கம்
உடுமலை பெரியார்நகர் ரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேங்கிய நீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.