தேன்கூட்டில் புகுந்து அழிக்கும் வண்டுகள் தேனீக்களுக்கு எதிரி! தேன் உற்பத்தி, மகரந்தச்சேர்க்கை பாதிப்பு
தேன்கூட்டில் புகுந்து அழிக்கும் வண்டுகள் தேனீக்களுக்கு எதிரி! தேன் உற்பத்தி, மகரந்தச்சேர்க்கை பாதிப்பு
UPDATED : ஆக 05, 2026 05:34 PM
ADDED : ஆக 05, 2026 05:31 PM

பொள்ளாச்சி: தேன்கூடுகளில் வண்டுகள் புகுந்த இடும் முட்டைகளில் இருந்து உருவாகும் புழுக்கள் தாக்குவதால், தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் நஷ்டம் ஏற்படுவதுடன், பயிர்களின் மகரந்தச்சேர்க்கையும் பாதிக்கிறது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானமாக உள்ளது. இதில், விவசாயத்துடன் இணைந்த தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சி பெற்ற விவசாயிகள், தேனீ வளர்த்து தேன் மற்றும் மெழுகு, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இந்நிலையில், தேன்கூடுகளில் வித்தியாசமான புழுக்கள் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. அதிலும், திவான்சாபுதுார் பகுதிகளில் தேன்கூடுகளில் புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறுகின்றனர்.
தேனீ விவசாயி விவேக் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தேன் கூடுகளை, 'ஸ்மால் பீ ஈட்டல்' என்ற பெயர் கொண்ட வண்டு போன்ற பூச்சி தாக்குகின்றன. இவை மலைத்தேன், வளர்ப்பு தேன் கூடுகளிலும் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
கூண்டில் ராணி தேனீ மொட்டு வைக்கும் இடத்தில் வண்டு போன்ற பூச்சி புகுந்து, அங்கு முட்டை இடுகிறது. தேனையே அவை உட்கொள்கின்றன. தேனீக்கள் பக்கம் யார் சென்றாலும் அவை விரட்டக்கூடிய தன்மை கொண்டது. ஆனால் இந்த வண்டு போன்ற பூச்சியை மட்டும் எதுவும் செய்வதில்லை.
ராணி தேனீ ஆயிரம் முட்டை இட்டால், அந்த வண்டுகள், 20 ஆயிரம் முட்டைகளை இடுகின்றன. தேனீக்களை விட சுறு, சுறுப்பாக உள்ளன. வண்டு இடும் முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், தேன் அடை முழுவதும் பரவி ஆக்கிரமித்துக்கொள்வதால், தேனீ இனங்கள் வெளியேறி வேறு பக்கம் செல்கின்றன.
இந்த புழுக்கள் ஆக்கிரமிப்பால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் தேன் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கிறது. விவசாயத்தில் மகரந்த சேர்க்கைக்கு கைகொடுக்கும் தேனீக்கள் வேறு பக்கம் செல்வதால், மகரந்தச்சேர்க்கை பாதித்து, உற்பத்தி இழப்பும் ஏற்படுகிறது.
இந்த வண்டு வகை, ஒரு கூண்டில் இருந்து மற்ற கூண்டுகளையும் தாக்குவதால் செய்வதறியாமல் தவிக்கிறோம். இது பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளில் தேனீக்களை தாக்கி வருகின்றன. இதற்கான மருந்து இன்னும் கண்டறியவில்லை. தற்போது, வேறு வழி தெரியாததால் புழுக்கள் தாக்கிய கூண்டில் உள்ள தேன்அடையை தீயிட்டு எரித்து விட்டோம்.
இது குறித்து தகவல் அறிந்து, கோவை வேளாண் பல்கலை கழகத்தில், 'வார் ரூம்' துவங்கப்பட்டு, தினமும் ஒரு பகுதிக்கு சென்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாகவும், எங்கு தாக்குதல் உள்ளது, வண்டு போன்ற பூச்சி எங்கிருந்து வருகிறது உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிப்பு குறித்து தகவல்களையும் கேட்டறிந்தனர்.
விரைவில், மருத்துவ முறை கண்டறிந்து, வண்டுகளையும், அவற்றின் புழுக்களையும் அழிக்கும் தொழில்நுட்ப வழிமுறைகளையும் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.
