UPDATED : ஜூன் 20, 2026 08:38 PM
ADDED : ஜூன் 20, 2026 08:30 PM

சாய்ஸ் பில்லிங் முக்கியமான கட்டம் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பான நடைமுறைகள் பற்றி பேசியதாவது:
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியான பிறகு, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் இணையதளத்தில் பதிவு செய்யும் 'சாய்ஸ் பில்லிங்' நடைபெறும். மாணவர்கள் தங்களது தரவரிசையை கருத்தில் கொண்டு, விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளின் கட்-ஆப் விவரங்கள் www.tneaonline.org இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதால், அதனை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான கல்லுாரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
இறுதி ஒதுக்கீடு மாணவர்களின் தரவரிசை மற்றும் விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும். கல்லுாரி ஒதுக்கீடு கிடைத்த பின், மாணவர்கள் கட்டணம் செலுத்தி தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து சேர்க்கையை உறுதிப்படுத்தலாம். பொறியியல் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை யாரிடமும் பகிரக் கூடாது. சந்தேகங்களுக்கு மாவட்டந்தோறும் செயல்படும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேவை மையங்கள் அல்லது 1800-425-01100 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு முன்னுரிமை 'இன்ஜி., படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்' என்ற தலைப்பில் பிரபல கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
புதிய பொறியியல் படிப்புகள் அறிமுகமாகி வந்தாலும், சிவில், இ.சி.இ., இ.இ.இ., வி.எல்.எஸ்.ஐ., மெக்கானிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு தொடர்ந்து அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும்போது, எதிர்காலத்தில் உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும் முதன்மைப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மாணவர்கள் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யும்போது, எதிர்காலத்தில் உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கு அடித்தளமாக இருக்கும் முதன்மைப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கல்லுாரியைத் தேர்வு செய்யும்போது அதன் அங்கீகாரம், உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்துறை கூட்டாண்மைகள் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை கவனிக்க வேண்டும். மேலும், தரவரிசைப் பட்டியல் வெளியாகும் முன்பே கல்லுாரி, பாடப்பிரிவு, கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, விருப்பத் தேர்வு பட்டியலை தயாரித்து வைத்துக்கொள்வது சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் என்றார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
