/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவாவில் 'மெத்தபெட்டமைன்' வாங்கி கோவையில் சப்ளை செய்த பொறியாளர் கைது
/
கோவாவில் 'மெத்தபெட்டமைன்' வாங்கி கோவையில் சப்ளை செய்த பொறியாளர் கைது
கோவாவில் 'மெத்தபெட்டமைன்' வாங்கி கோவையில் சப்ளை செய்த பொறியாளர் கைது
கோவாவில் 'மெத்தபெட்டமைன்' வாங்கி கோவையில் சப்ளை செய்த பொறியாளர் கைது
ADDED : அக் 16, 2024 06:48 AM

கோவை : கோவாவில் இருந்து 'மெத்தபெட்டமைன்' வாங்கி சப்ளை செய்து வந்த, கோவையை சேர்ந்த கட்டடவியல் பொறியாளரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை, கரும்புக்கடை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட புட்டுவிக்கி சாலையில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு மயானத்தின் அருகில், இளைஞர்கள் வந்து போவது தெரியவந்தது.
அவர்கள் சிலரிடம் சோதனை நடத்தியபோது, மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது. இதையடுத்து கரும்புக்கடையை சேர்ந்த, நியாசுதீன், 29, உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அஜ்மல், 26, காளப்பட்டியை சேர்ந்த கோகுல், 28 மற்றும் கல்லுாரி மாணவன் யாதவன், 21 ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா, ஒரு கிராம் 'மெத்தபெட்டமைன்' பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் கூறியதாவது:
கோவை காளப்பட்டியை சேர்ந்தவர் கோகுல், 28; கட்டடவியல் இன்ஜினியர். இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை கோவையை சேர்ந்தவர் எனவும், தற்போது கோவாவில் இருப்பதாகவும், அறிமுகம் செய்துள்ளார்.
அந்த நபர் கோகுலிடம், மெத்தபெட்டமைன் குறித்து கூறியுள்ளார். மெத்தபெட்டமைன் பயன்படுத்தினால் மூளை புத்துணர்ச்சி பெற்று, 'கிரியேடிவ்' ஆக பணியாற்ற முடியும் எனவும், தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
அந்த நபரிடம் இருந்து, மெத்தபெட்டமைன் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்த கோகுல், பின் அதற்கு அடிமையாகி விட்டார். அடிக்கடி அந்த நபரிடம், மெத்தபெட்டமைன் வாங்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், கோவை கல்லுாரி மாணவர்களுக்கும் சப்ளை செய்ய துவங்கினார்.
குறிப்பாக, கல்லுாரி மாணவர்கள், இரவு நேரங்களில் 'டர்ப்' கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு, ஒரு கிராம் ரூ.4000க்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
தற்போது, கோவாவில் இருந்து மெத்தபெட்டமைன் சப்ளை செய்த நபரை பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர். போதைப்பொருட்கள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.