/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களிடம் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கணும்: பயிற்சி பட்டறையில் அறிவுறுத்தல்
/
மாணவர்களிடம் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கணும்: பயிற்சி பட்டறையில் அறிவுறுத்தல்
மாணவர்களிடம் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கணும்: பயிற்சி பட்டறையில் அறிவுறுத்தல்
மாணவர்களிடம் சுற்றுச்சூழல் கல்வி போதிக்கணும்: பயிற்சி பட்டறையில் அறிவுறுத்தல்
ADDED : அக் 29, 2025 11:40 PM
- நமது நிருபர் -
'சுற்றுச்சூழல் காப்பதில் மாணவ சமுதாயத்தினர் மத்தியில் சுற்றுச்சூழல் கல்வி போதிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருப்பூர் மாவட்ட காலநிலை மாற்றம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை, அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தின.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, தமிழ்நாடு கழிவு மேலாண்மை மன்ற செயலாளர் டாக்டர் வீரபத்மன் பேசியதாவது:
பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில், குப்பை கையாள்வதில் உள்ள எதிர்மறை எண்ணத்தை மாற்ற வேண்டும்.
பள்ளி வகுப்பறைகளில் சேகரமாகும், 400, 500 கிராம் அளவிலான சொற்ப அளவு குப்பையையே கையாள முடியாவிட்டால், ஒட்டு மொத்த நகரில் குவியும் டன் கணக்கிலான குப்பையை எப்படி மேலாண்மை செய்ய முடியும்?
எனவே, 'என் குப்பை - என் பள்ளி - என் பொறுப்பு' என்ற மனநிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, குப்பையை தரம் பிரித்து வழங்க செய்ய வேண்டும்.
குப்பை தரம் பிரிக்கப்பட்டால் தான் எளிதாக மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்க முடியும்; குப்பையை பொது இடங்களில் வீசியெறிவது உள்ளிட்ட செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
அதே போன்று, வீடு தோறும் சரியான முறையில் குப்பையை சேகரித்து, தரம் பிரிக்கும் கட்டமைப்பை உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
'மீண்டும் மஞ்சப்பை' குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. 'துப்புரவாளன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் உள்ளிட்டோர் பேசினர். ஸ்ரீ யஷ்வந்தி, நன்றி கூறினார்.

