/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகர பெண் போலீசாருக்கு சம உரிமை! தனித்திறமைக்கு புது வாய்ப்பு
/
மாநகர பெண் போலீசாருக்கு சம உரிமை! தனித்திறமைக்கு புது வாய்ப்பு
மாநகர பெண் போலீசாருக்கு சம உரிமை! தனித்திறமைக்கு புது வாய்ப்பு
மாநகர பெண் போலீசாருக்கு சம உரிமை! தனித்திறமைக்கு புது வாய்ப்பு
ADDED : அக் 12, 2024 11:15 PM

கோவை : கோவை மாநகர போலீசில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு சம உரிமை அளிக்கும் வகையில், இதுநாள் வரை ஆண் போலீசார் மட்டும் பணிபுரிந்த அனைத்து பிரிவுகளிலும் பணிகள் ஒதுக்கப்பட்டு, தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தமிழக போலீசில் பெண்கள் பணிக்குச் சேர்ந்து 50 ஆண்டுகளாகிறது. எனினும், போலீசில் உள்ள பல்வேறு துறைகளில் தற்போது வரை பெண் போலீசார் பணியமர்த்தப்படாமல் இருந்தனர். பொதுவான பணிகளில் மட்டுமே அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து பிரிவுகளிலும் களமிறக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திட்டமிட்டார்.
அதன்படி, கோவை மாநகர போலீசில் உள்ள பெண் போலீசார் அவர்கள் விரும்பும் துறையில் பணியாற்றும் வகையில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரின் அதிவிரைவுப்படை (ஸ்ட்ரைகிங் போர்ஸ்), மோப்ப நாய்கள் பிரிவு, கனரக வாகனங்கள் டிரைவர், படைக்கலன் பணிமனை உள்ளிட்ட பிரிவுகளில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை ஆண் போலீசார் மட்டுமே பணியாற்றிய இப்பிரிவுகளில், பெண் போலீசாரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கோவை மாநகர போலீசில், எந்தெந்த பணிகளில் காலகாலமாக பெண் போலீசார் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை கண்டறிந்து, அவற்றை செய்ய விரும்பும் பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எல்லா விதமான பணிகளையும் பெண் போலீசாரால் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்க இம்முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி, மாநகர போலீஸ் அதிவிரைப்படையில் மூன்று பெண் போலீசார் உள்ளனர். மோப்ப நாய்கள் பிரிவில் பயிற்சி பெற்ற இருவர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோல், 10 பேர் கனரக வாகனங்களை இயக்குகின்றனர். படைக்கலன் பணிமனையில் உள்ள ஆயுதங்களை பராமரிக்கும் பணியிலும் பெண் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்,'' என்றார்.