/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுக்கழிப்பிடத்தில் எழுதியிருந்த தலைவர்களின் பெயர்கள் அழிப்பு
/
பொதுக்கழிப்பிடத்தில் எழுதியிருந்த தலைவர்களின் பெயர்கள் அழிப்பு
பொதுக்கழிப்பிடத்தில் எழுதியிருந்த தலைவர்களின் பெயர்கள் அழிப்பு
பொதுக்கழிப்பிடத்தில் எழுதியிருந்த தலைவர்களின் பெயர்கள் அழிப்பு
ADDED : ஏப் 23, 2025 02:44 AM

கோவை:கோவை மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில் எழுதியிருந்த தலைவர்களின் பெயர்கள், நமது நாளிதழில் புகைப்படத்துடன் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, அழிக்கப்பட்டன. பின், 'சமுதாய கழிப்பிடம்' என, புதிதாக எழுதப்பட்டது.
கோவை மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில், தியாகி கக்கன் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. இது, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது சமூக வலைதளத்தில், மாநகராட்சியின் செயலை விமர்சித்து, பதிவு வெளியிட்டார். நேற்றைய நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த, 2010ல் குறிச்சி நகராட்சியாக இருந்தபோது, சில்வர் ஜூப்ளி வீதி அண்ணா நகரில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு, தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மாநகராட்சியோடு இணைத்தபின், புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் எழுதப்பட்டிருக்கிறது. விமர்சனத்துக்கு உள்ளானதும், அப்பெயர்கள் நேற்று அழிக்கப்பட்டன.
அதன்பின், 'கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 85வது வார்டு, அண்ணா நகர் (சில்வர் ஜூப்ளி வீதி), குறிச்சி. சமுதாய கழிப்பிடம்' என, எழுதப்பட்டது. இதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட மற்ற கழிப்பறைகளில் ஏதேனும் தலைவர்களின் பெயர்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து, தவறு இருப்பின், அவற்றை உடனடியாக, திருத்தம் செய்ய, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

