/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் சேவையில் சிறப்பு; கோவை கோட்டத்துக்கு விருது
/
தபால் சேவையில் சிறப்பு; கோவை கோட்டத்துக்கு விருது
ADDED : ஆக 26, 2025 10:47 PM
கோவை; தமிழக தபால் வட்டம், சிறந்த ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. சேமிப்பு வங்கி, சர்வதேச அஞ்சல், அஞ்சல் ஆயுள் காப்பீடு, விளையாட்டு, திறன் உட்பட பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பார்சல் அனுப்பியதில், 2024--25ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய வகையில், ஆர்.எம்.எஸ்., கோவை கோட்டம் முதலிடம் பிடித்தது.
சர்வதேச பார்சல் மற்றும் முக்கியமான ஆவணங்களை மலிவு விலையில் அனுப்புவதற்கான சேவை (ஐ.டி.பி.எஸ்.,) பிரிவில், போதிய வருவாய் ஈட்டியதில், கோவை கோட்டம் முதலிடம், ஆதார் உட்பட பொதுமக்களுக்கான சேவையில், குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியதில் கோவை கோட்டம் மூன்றாமிடம் பெற்றது. பிரதம மந்திரியின் ஆயுள் காப்பீடு திட்டத்தில், காப்பீடுகளை ஈர்த்த வகையில், கோவை கோட்டம் இரண்டாமிடம் பெற்றது.
இறகுப்பந்து போட்டியில் சாதித்த, கோவை தலைமை தபால் நிலைய தபால் உதவியாளர் சுப்ரமணி, மேலாளர் மற்றும் பயிற்சியாளர் கார்த்திக், கோழிக்கோட்டில் நடந்த திறன் சார்ந்த போட்டியில் வென்ற கோவை தலைமை தபால் நிலைய ஊழியர் சதுர்வேதா மற்றும் வேலாண்டிபாளையம் துணை தபால் நிலைய அலுவலர் நக்ஷத்ரா, தபால் வினியோகப் பிரிவில், ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலைய போஸ்ட்மேன் ராஜா ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, நாளை மறுதினம் (29ம் தேதி) சென்னையில் நடக்கும் விழாவில், தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் மரியம்மா தாமஸ், விருது வழங்குகிறார்.