ADDED : மார் 18, 2024 11:04 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, 57 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பொள்ளாச்சி அருகே, சமத்துார் ராம அய்யங்கார் முனிசிபல் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. அதன்படி, பள்ளியில், 1966 - 67ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த 30 முன்னாள் மாணவர்கள், 57 ஆண்டுகள் கழித்து, சந்தித்துக்கொண்டனர்.
அப்போது, அவரவர் தான் படித்த காலத்தில் நடந்த, பழைய நினைவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டும், ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.
தொடர்ந்து, சக நண்பர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் சிலரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக, பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் தைரியம் கலந்து கொண்டார். அவருக்கு அனைவரும் நினைவுப்பரிசு வழங்கினர். தொடர்ந்து, பள்ளிக்கு ஆம்ப்ளிபையர் ஸ்பீக்கர் மற்றும் மைக் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
