/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெருக்கடிகளை களைய விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு! கூலி பிரச்னை, மின் கட்டணத்தால் சிக்கல்
/
நெருக்கடிகளை களைய விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு! கூலி பிரச்னை, மின் கட்டணத்தால் சிக்கல்
நெருக்கடிகளை களைய விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு! கூலி பிரச்னை, மின் கட்டணத்தால் சிக்கல்
நெருக்கடிகளை களைய விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு! கூலி பிரச்னை, மின் கட்டணத்தால் சிக்கல்
ADDED : பிப் 16, 2025 11:39 PM

சோமனுார்; ''பல நெருக்கடிகளை சந்தித்து வரும் விசைத்தறி தொழிலை பாதுகாத்து, வளர்ச்சியை நோக்கி பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதானமாக விசைத்தறி ஜவுளி தொழில் நடக்கிறது. சுமார், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.
லட்சக்கணக்கனக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள இத்தொழில், கடந்த சில ஆண்டுகளாக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இதனால், விசைத்தறி ஜவுளி தொழில் படிப்படியாக முடங்கி வருவது விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கூலி உயர்வு
இரு மாவட்டங்களில் இயங்கும் விசைத்தறிகளில், 95 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. விலைவாசிக்கு ஏற்ப மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு இருந்தால் மட்டுமே தொழில் ஓரளவுக்கு சீராக நடக்கும் நிலை உள்ளது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு
கூலி உயர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல போராட்டங்களுக்கு இடையில், சலுகைகளை அரசு அறிவித்தது.
ஆனால், ஆண்டுக்கு, ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வை இதுவரை ரத்து செய்யாததால், விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த இரு பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
தற்போது, வீடுகள் மற்றும் விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அரசு தரப்பில் இருந்து, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால், விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது : பல லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ள விசைத்தறி தொழில், கூலி உயர்வு இல்லாமை, மின் கட்டண உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் சந்தை நிலவரம் உள்ளிட்ட நெருக்கடிகளால் சிக்கி தவிக்கிறது.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற்று தர, அரசு நடவடிக்கை தாமதம் செய்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்படும் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரினோம். 50 சதவீத மானியத்தில் சோலார் அமைத்து தாருங்கள் என்றோம். விசைத்தறி தொழில் பிரச்னைகளை தீர்க்க தனி வாரியம் அமைக்க கோரினோம். எதுவும் நடக்கவில்லை. நெருக்கடிகளால், தொழிலை நடத்த முடியாமல் ஏராளமான விசைத்தறிகள் பழைய இரும்புக்கடைகளுக்கு போய்விட்டன.
இளைய தலைமுறையினர் இந்த தொழிலே வேண்டாம் என்று மாற்று வழி தேடி சென்று விட்டனர். விசைத்தறி தொழிலையும், எங்களையும் யார் தான் காப்பாற்ற போகிறார்களோ தெரியவில்லை. விரைந்து கூலி உயர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.