'ஒன் டே' சுற்றுலா திட்டத்தில் வேன் இயக்க எதிர்பார்ப்பு
'ஒன் டே' சுற்றுலா திட்டத்தில் வேன் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 23, 2026 05:40 AM
வால்பாறை: 'ஒன் டே' சுற்றுலா திட்டத்தில், வால்பாறைக்கு சுற்றுலா வேன் இயக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறைக்கு, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், கோவை தமிழ்நாடு ஓட்டலில் இருந்து, சுற்றுலா வேன் இயக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வேன் ஆழியாறு, அட்டகட்டி வழியாக வால்பாறைக்கு இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வேன் இயக்கப்படாததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறைக்கு 'ஒன் டே' சுற்றுலாத்திட்டத்தின் கீழ்,கோவையிலிருந்து, பொள்ளாச்சி, ஆழியாறு, கவியருவி வழியாக வால்பாறை வரை சுற்றுலாவேன் இயக்கப்படும். அதன்பின், வால்பாறையிலிருந்து, அக்காமலை பாலாஜி கோவில், கூழாங்கல்ஆறு, நல்லமுடி காட்சிமுனை, சோலையாறுஅணை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.
சுற்றுலா வேனில் பயணம் செய்ய, ஒரு நபருக்கு, 1,155 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறைவான கட்டணம் என்பதால், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சியடைந்தனர். சீசன் காலத்தில் மட்டுமே சுற்றுலாவேன் இயக்க முடியும். ரெகுலராக வால்பாறைக்கு சுற்றுலாவேன் இயக்க போதிய 'புக்கிங்' இல்லை.
இவ்வாறு, கூறினர்.
