விசைத்தறி தொழிலை மேம்படுத்த எதிர்பார்ப்புகள் ஏராளம்!பட்ஜெட் அறிவிப்புக்கு காத்திருப்பு
விசைத்தறி தொழிலை மேம்படுத்த எதிர்பார்ப்புகள் ஏராளம்!பட்ஜெட் அறிவிப்புக்கு காத்திருப்பு
UPDATED : ஜூலை 29, 2026 06:47 PM
ADDED : ஜூலை 29, 2026 06:41 PM

சோமனுார்: 'விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் அல்லது வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்' என்ற எதிர்பார்ப்பில், விசைத்தறியாளர்கள் காத்திருக்கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஸ்பின்னிங் மற்றும் விசைத்தறி ஜவுளி தொழில் பிரதானமாக உள்ளது. நுால் ரகங்கள் மற்றும் துணி ரகங்கள் உற்பத்தி அதிகம் உள்ள பகுதியாகும். சார்பு தொழில்களாக, பஞ்சு விற்பனை, சைசிங் தொழில், துணி ரகங்கள் விற்பனை ஆகியன உள்ளன. இத்துறையினால், பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இத்தொழில்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்து உள்ளதால், அனைத்தும் சீராக நடந்தால் தான் சந்தை நிலவரம் நன்றாக இருக்கும். பஞ்சு விலை ஏறினால், நுால் ரகங்கள் உற்பத்தி குறையும். நுால் ரகங்கள் விலை ஏறினால், துணி ரகங்கள் விலையும், உற்பத்தியும் குறையும். இதனால், சந்தை நிலவரம் எப்போதும் நிலைத்தன்மை இல்லாமல் இருப்பது வாடிக்கையாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மின் கட்டண உயர்வு, கூலி குறைப்பு, தொழிலாளர் சம்பளம், போக்குவரத்து செலவு, உதிரிபாகங்கள் செலவு, ஆட்கள் பற்றாக்குறை உட்பட காரணங்களாலும், விசைத்தறி ஜவுளி தொழில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தொழிலில் உள்ள நெருக்கடிக்களுக்கு தீர்வு காண பொதுவான அரசு அமைப்பு ஒன்று தேவை என்பது, விசைத்தறியாளர்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி கூறியதாவது:
விசைத்தறி ஜவுளி தொழில் நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. விசைத்தறிகள் பழைய இரும்புக்கு போடும் நிலை உள்ளது. அளவுக்கு அதிகமான உற்பத்தி காரணமா அல்லது போட்டிகள் அதிகரித்துள்ளதால் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியா, மூலப்பொருட்களின் விலையில் உள்ள ஏற்ற, இறக்கங்கள் காரணமா என, குழம்பிக்கொண்டிருக்க வேண்டிய சூழல் தான் தினமும் உள்ளது. எங்கள் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது அவசர அவசியமாக உள்ளது.
அதற்கு பொதுவான அமைப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பது, எங்கள் நீண்ட ஆண்டு கோரிக்கையாக உள்ளது. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இத்தொழிலுக்கு என, தனியாக அமைச்சகம் அல்லது தனி வாரியம் அமைக்க வேண்டும். விசைத்தறி ஜவுளி துறையில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியும். தற்போது, கைத்தறி துணி நுால் துறைக்கு கீழ் உள்ளோம். கைத்தறிகளை விட விசைத்தறிகளே அதிகம் உள்ளது. அதனால், இத்துறையை பிரித்து, விசைத்தறிக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். அப்போது தான் அதிகாரிகளை எளிதில் சந்தித்து எங்கள் பிரச்னைகளை கூறி தீர்வு காண முடியும். இக்கோரிக்கைகள் குறித்து, கடந்த காலங்களில், பல முறை மனு அளித்துள்ளோம். எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது, த.வெ.க., அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். வரும் பட்ஜெட்டில் நல்ல செய்தியுடன் தனி வாரியம் அல்லது அமைச்சகம் தொடர்பான அறிவிப்புகள் வரும், என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
