/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா, கலாசார மையம் அமைக்க எதிர்பார்ப்பு! : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
சுற்றுலா, கலாசார மையம் அமைக்க எதிர்பார்ப்பு! : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுற்றுலா, கலாசார மையம் அமைக்க எதிர்பார்ப்பு! : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சுற்றுலா, கலாசார மையம் அமைக்க எதிர்பார்ப்பு! : அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 19, 2026 05:36 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த சுற்றுலா தகவல் மையம், கொங்கு பாரம்பரியம் மற்றும் கலாசார மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. பொள்ளாச்சிக்கு வரும் துணை முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
'பொழில்வாய்ச்சி' எனப்படும் பொள்ளாச்சி பெயருக்கேற்ப பசுமை நிறைந்த பகுதியாக உள்ளது. விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களும் நிறைந்த பொள்ளாச்சியில், திரும்பும் இடங்களெல்லாம் பசுமைப்போர்வை போர்த்தியது போன்று வயல்வெளிகள், ரோட்டோரம் நிழல் அளிக்கும் மரங்கள், ஆழியாறு ஆற்றில் பாய்ந்தோடும் நீர், எனசுற்றுலாவை மையப்படுத்தி உள்ளது. மேலும், டாப்சிலிப், வால்பாறை போன்ற வனப்பகுதியையும் உள்ளடக்கியுள்ளது.
பொள்ளாச்சி பகுதி மக்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக உள்ள ஆழியாறு அணை. இயற்கையாக மூலிகை கலந்த நீராக கொட்டும் கவியருவியும் உள்ளது. மேலும், வால்பாறைக்கும் செல்லும் மலைப்பாதையில், 40 கொண்டைஊசி வளைவுகளை உள்ளடக்கியுள்ளது.
வால்பாறையில், சின்னக்கல்லார், சோலையாறு டேம், அப்பர் நீராறு, லோயர் நீராறு என நீர்தேக்கங்கள்; பசுமையான தேயிலை தோட்டங்கள் என, இயற்கை எழில் கொஞ்சும் அதிசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இயற்கையோடு ஆன்மிகத்தலத்துக்கும் பெயர் பெற்றுள்ளது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை பாலாஜி கோவில் என பல்வேறு ஆன்மிக தலங்களை ஒருங்கே கொண்டுள்ளது.
பொள்ளாச்சியின் அழகை படம் பிடித்து காட்ட 'சினிமா'க்காரர்களுக்கும் மோகம் விடுவதில்லை. பல திரைப்படங்கள் பொள்ளாச்சியை சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொள்ளாச்சியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி,வால்பாறை, ஆழியாறு, டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல, பொள்ளாச் சியை மையமாக கொண்டு சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும். சுற்று பார்க்க வேண்டிய இடங்கள், தங்கும் விடுதிகளின் விபரங்கள், வழிகாட்டிகளை நியமிக்கலாம். இதனால், வேலை வாய்ப்பு பெருகும்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில், சமீபத்தில் நடந்த சுற்றுலா மேம்பாடு கூட்டத்திலும் சுற்றுலாவுக்கான வசதிகள் மேம்படுத்த வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு மனு அனுபப்பப்பட்டது.
வரும், 22ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பொள்ளாச்சி வர உள்ள நிலையில், சுற்றுலா மேம்பாட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டால் பயனாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் பொதுப்பணித்துறை வசம் உள்ள கட்டடத்தை, சுற்றுலா வளர்ச்சி மற்றும் தகவல் மையமாக மாற்றலாம். அங்கு, பொள்ளாச்சி புரதான புகைப்பட அருங்காட்சியகமாகவும், சுற்றுலாப் பயணியருக்கு தேவையான வசதிகளும், தகவல்களும் வழங்கும் மையமாக செயல்படுத்த அரசின் உதவியோடு, தொழில் வர்த்தக சபை தயாராக உள்ளது.
பொள்ளாச்சி - வால்பாறை சுற்றுலா வளர்ச்சிக்கு ஏதுவாக இப்பகுதி சார்ந்த கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், 5 - 10 ஏக்கர் பரப்பளவில் கொங்கு கிராமிய கலாசார பண்பாட்டு மையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிலம் எடுத்து, ஆழியாறு பொதுப்பணித்துறை பழைய பணியாளர் குடியிருப்பு பகுதியில் அமைக்கலாம்.
இதற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வழங்கவும், பராமரிக்கவும், தொழில் வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்த தயாராக உள்ளோம் என மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளோம். இதற்குரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.

