/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலுவை வழக்கு விசாரணை துரிதம்; 15 ஆண்டு நிலுவை வழக்குகளில் தீர்வு
/
நிலுவை வழக்கு விசாரணை துரிதம்; 15 ஆண்டு நிலுவை வழக்குகளில் தீர்வு
நிலுவை வழக்கு விசாரணை துரிதம்; 15 ஆண்டு நிலுவை வழக்குகளில் தீர்வு
நிலுவை வழக்கு விசாரணை துரிதம்; 15 ஆண்டு நிலுவை வழக்குகளில் தீர்வு
ADDED : அக் 04, 2024 11:36 PM
கோவை : ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், நீண்ட கால நிலுவை வழக்குகளை முடிக்க துரித விசாரணை நடத்தப்பட்டு, 15 ஆண்டுக்கும் மேல் நிலுவையிலுள்ள, 13 வழக்கில் விரைந்து தீர்வு காணப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச வழக்கு மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்க, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
உத்தரவு வர லேட் ஆகிறது
குற்றம் சாட்டப்பட்ட நபர், தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் போது, மனு தள்ளுபடி செய்யப்பட்டால், மேல்முறையீடு செய்கின்றனர். ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை முடிந்து இறுதி உத்தரவு வர பல ஆண்டுகள் ஆகிறது.
அதுவரை, கீழ் கோர்ட்டில் சாட்சி விசாரணை நடத்தப்படாமல் மாதந்தோறும் வழக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இதன் காரணமாக, நீண்ட கால நிலுவை வழக்குகளில் தீர்வு காணப்படுவதில் சிரமம் ஏற்படுகிறது.
பொதுவாக அனைத்து கோர்ட்களில் நீண்ட காலம் நிலுவையிலுள்ள வழக்குகளில் விரைந்து தீர்வு காண சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், நிலுவையிலுள்ள வழக்கில் விரைந்து தீர்வு காண துரித விசாரணை நடத்தப்பட்டது.
மூன்று வழக்குகள் வெயிட்டிங்
இக்கோர்ட்டில், 2023, ஜன., வரையில், 79 வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த ஓராண்டில், 15 ஆண்டுக்கும் மேல் நிலுவையில் இருந்த, 13 வழக்கில் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்று வழக்கு மட்டுமே தீர்ப்புக்காக காத்திருக்கிறது.
கடந்த ஒன்பது மாதத்தில் மட்டும், ஏழு புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை எடுத்து கொள்ளப்பட்டது. கடந்த மாதம் வரை, மொத்தம், 75 வழக்குகள் விசாரணை நிலுவையில் உள்ளது. இதில், 5 ஆண்டுக்கும் மேல், நிலுவையிலுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 49 ஆக இருக்கிறது.
லஞ்ச வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூன்று மாதத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமாகும் பட்சத்தில், அதை பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் எளிதில் ஜாமின் பெற்றுவிடுவார்கள்.
சட்டத்தில்அவர்களுக்கு சாதகமான அம்சங்களை பயன்படுத்தி, இடைக்கால உத்தரவு பெற்று மீண்டும் பணியில் சேர்ந்து விடுகின்றனர். விசாரணை முடிவதற்குள் பணியிலிருந்து ஓய்வு பெற்று விடுகின்றனர்.
லஞ்சம் மற்றும் ஊழல் வழக்கில், அரசு தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு குறைந்தபட்சம் ஒரு ஆண்டும், அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது.
மூன்று ஆண்டிற்கு கீழ் தண்டனை கிடைக்கும் பட்சத்தில், அவர்களை உடனடியாக ஜாமினில் விடுவிக்க சட்டத்தில் இடமுள்ளது. இதனால் சிறைக்கு செல்லாமல், வெளியில் இருந்து தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்கின்றனர்.