/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு போட்டிக்கான செலவினத்தொகை; நிதி ஒதுக்க கோரிக்கை
/
விளையாட்டு போட்டிக்கான செலவினத்தொகை; நிதி ஒதுக்க கோரிக்கை
விளையாட்டு போட்டிக்கான செலவினத்தொகை; நிதி ஒதுக்க கோரிக்கை
விளையாட்டு போட்டிக்கான செலவினத்தொகை; நிதி ஒதுக்க கோரிக்கை
ADDED : ஆக 05, 2025 11:27 PM
பொள்ளாச்சி; விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்காக, குறிப்பிட்ட அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை வாயிலாக, குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மாவட்ட, மண்டல மற்றும் மாநில போட்டியும் நடத்தப்படவும் உள்ளது. அவ்வகையில், போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, உடற்கல்வி ஆசிரியர் வாயிலாக ஒவ்வொரு விளையாட்டிலும் திறன் வாய்ந்த மாணவர்கள் கண்டறியப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுவதுடன் போட்டியில் பங்கேற்கவும் செய்கின்றனர்.
இதற்காக, உணவுப் படியாக, 125 ரூபாய், டிக்கெட் கட்டணத்தை பொறுத்து போக்குவரத்துக்கான செலவுத்தொகையும் அளிக்க வேண்டும்.
ஆனால், தலைமையாசிரியர்கள் சிலர் மட்டுமே அதற்கான உரிய தொகையை அளிப்பதாகவும் பெரும்பாலானவர்கள் விருப்பம் காட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கான தண்ணீர் மற்றும் டீ செலவு, நடுவர்களாக செயல்படும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உணவு செலவினங்களை மட்டும் ஏற்கிறது.
அதேநேரம், போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் வாயிலாக உரிய தொகை அளிக்க வேண்டும்.
ஆனால், விளையாட்டு போட்டிக்கென எந்தவொரு நிதியும் பள்ளிக் கல்வித்துறையால் ஒதுக்கப்படுவதில்லை என, தலைமையாசிரியர்கள் சிலர், மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், சிலர் மட்டுமே பள்ளி பொது நிதி வாயிலாக, மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கின்றனர்.
எனவே, பள்ளியில் இருந்து, ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் மாணவர்களுக்கான போக்குவரத்து செலவை, அவரவரோ, உடற்கல்வி ஆசிரியர்களோ ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. விளையாட்டுக்கென, பள்ளியில் இருந்து போக்குவரத்து செலவு மற்றும் தினப்படி அளிக்க, அரசால் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.