/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கு அனுபவ பட்டா.. வனமக்களுக்கு உரிமை! இதுவரை 595 பேருக்கு வினியோகம்
/
பழங்குடியினருக்கு அனுபவ பட்டா.. வனமக்களுக்கு உரிமை! இதுவரை 595 பேருக்கு வினியோகம்
பழங்குடியினருக்கு அனுபவ பட்டா.. வனமக்களுக்கு உரிமை! இதுவரை 595 பேருக்கு வினியோகம்
பழங்குடியினருக்கு அனுபவ பட்டா.. வனமக்களுக்கு உரிமை! இதுவரை 595 பேருக்கு வினியோகம்
ADDED : பிப் 03, 2025 11:56 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, 18 செட்டில்மென்ட்களில் வசிக்கும், 595 பழங்குடியினருக்கு தனிநபர் வன அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி, நாகரூத்து - 1, நாகரூத்து - 2, சின்னார்பதி, பழைய சர்க்கார்பதி, நெடுங்குன்று, வெள்ளிமுடி, கவர்க்கல், சின்கோனா, காடம்பாறை, கீழ்ப்புன்னாச்சி, பாலகணறு, பரமன்கடவு, உடுமன்பாறை, கல்லார்குடி தெப்பக்குளம்மேடு, சங்கரன்குடி என, 18 பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இங்குள்ள மக்கள், தங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, தனிநபர் வனஅனுபவ உரிமை சட்டத்தின் கீழ், வேளாண், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர, சமூக வனஅனுபவ உரிமை சட்டத்தின் கீழ், சிறுவனப் பொருட்கள் சேகரம் செய்தும் வருகின்றனர்.
குறிப்பாக, செடி, கட்டை, குச்சி, தேன், மருத்துவ தாவரம், மூங்கில், சீமாறு, கடுக்காய், பெருநெல்லி, மாவடு, பட்டை, வேங்கைப்பால் போன்றவற்றை வீட்டு பயன்பாடு மற்றும் விற்பனைக்காக, அவர்கள் வனத்தில் சேகரித்து வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த, 2017ம் ஆண்டு முதல், 18 செட்டில்மென்ட்களில், பழங்குடியினர் கோரிக்கையை ஏற்று, இதுவரை, 595 பேருக்கு, அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, பழைய சர்க்கார்பதி நீங்கலாக, 17 செட்டில்மென்ட் பகுதி மக்களுக்கு, சமூக வன அனுபவ உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் கூறியதாவது:
வனத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு உள்ள உரிமையை அதிகார பூர்வமாக வழங்கும் வகையில், வன உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வனத்தில் வாழ்பவர்கள், 75 ஆண்டுகளாக வனத்தில் வாழும் மற்ற பிரிவினர்களும் உரிமை கொள்ளலாம். வனப்பாதுகாப்பு பொறுப்பையும் இந்த சட்டம் வழங்குகிறது.
அதன்படி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், நெடுங்குன்று, உடுமன்பாறை, பரமன்கடவு உள்ளிட்ட, 18 செட்டில்மென்ட்களில், கடந்த, 2017 முதல், 739 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, மாவட்ட வனக்குழு அனுமதியின் பேரில், 595 பேருக்கு தனிநபர் அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 30 பேருக்கு கூடுதலாக தனிநபர் அனுபவ உரிமை பட்டா வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில், கோழிகமுத்தியில் -- 31, கூமாட்டி --- 22, எருமைப்பாறை --- 9, நாகரூத்து 1-ல் --- 23, நாகரூத்து, 2ல் --- 15 வீடுகள், என, மொத்தம், 100 வீடுகள் கட்டப்படுகின்றன.
மலைப்பகுதியில் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும், 4 லட்சத்து, 95 ஆயிரத்து, 430 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, தாட்கோ வாயிலாக, கோழிகமுத்தியில் - -33, கூமாட்டி -- -2, எருமைப்பாறை -- 15 வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

